தேர்தல் காரணமாக அமலில் இருந்த விதிமுறைகள் விலக்கல்! எனினும் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு!

0
69

தேர்தல் காரணமாக அமலில் இருந்த விதிமுறைகள் விலக்கல்! எனினும் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி அன்று வெளியிட்டது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் யாரேனும், தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள தொகைக்கு மேல் பணமோ, நகையோ மற்றும் பொருட்களோ பொதுவெளியில் எடுத்து சென்றால் அதை உடனடியாக பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் தமிழக அரசு புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்கக் கூடாது எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி கடந்த 19-ந் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.

அதனை தொடர்ந்து, நேற்று (பிப்ரவரி 22) தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த தேர்தல் நடத்தை விதிகள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்ததையொட்டி விலக்கிக் கொள்ளபடுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எனினும், வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குபதிவு எந்திரம் பழுதான காரணத்தால் புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டு வாக்குச்சாவடி எண் 4-ல் வருகிற 24ஆம் தேதி (நாளை) மறு வாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, மறு வாக்குப்பதிவு நடைபெறும் புவனகிரி பேரூராட்சி பகுதிகள் தவிர மற்ற இடங்களில் பிறப்பிக்கபட்ட தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

author avatar
Parthipan K