நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு! அமைச்சர் பேச்சு!!

0
105

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு! அமைச்சர் பேச்சு!!

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வாக நீட் என்னும்  பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பினர்.

அந்த வகையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இருந்தாலும் மத்திய அரசு இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமலேயே இருந்து வருகிறது. இதற்காக தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனால் இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்தது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் விலக்கு மசோதாவை தமிழக கவர்னர் இன்னும் ஜனாதிபதிக்கு அனுப்பாமல் இருப்பது பேரவை மாண்பை சிதைப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.

நீட் நுழைவுத்தேர்வு பள்ளிக்கல்வியின் தரத்தை அர்த்தமற்றதாக ஆக்குகிறது. எனவே கூட்டாட்சி தத்துவத்தை சீரழிக்கும் வகையில் உள்ள நீட் தேர்வு வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சாதகமானதாக இருப்பதால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியாக போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனவே நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற மூத்த சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழக கவர்னர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை மீண்டும் சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற அனைத்துக்கட்சிகள் சார்பில் கவர்னரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K