10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ஒத்திவைத்தது தேர்வுத்துறை!

0
83

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை ஒத்திவைத்தது தேர்வுத்துறை!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவலின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி, தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததையடுத்து, இந்த மாதம் 1-ந் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், பொதுத்தேர்வுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரியில் நடைபெறுவதாக இருந்த திருப்புதல் தேர்வு கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வுக்கான திருத்தம் செய்யப்பட்ட புதிய தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து, 10ஆம் வகுப்பிற்கு இந்த மாதம் 9ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை முதல் கட்ட திருப்புதல் தேர்வும், அதனை தொடர்ந்து அடுத்த மாதம் மார்ச் 28-ல் தொடங்கி ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வும் நடைபெற உள்ளது.

இதேபோல், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 9-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை முதல் கட்ட திருப்புதல் தேர்வும், மார்ச் மாதம் 28ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், வரும் 10ஆம் தேதி வியாழக்கிழமையன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதால், அன்று நடைபெற உள்ள 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத் திருப்புதல் தேர்வு அடுத்த வியாழக்கிழமை 17-ந் தேதியன்று நடைபெறும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K