ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்த அந்த தகவல்! கச்சா எண்ணெயின் விலை கிடுகிடு உயர்வு!

0
137

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் சற்றேறக்குறைய 100 நாட்களை நெருங்கி நடந்து கொண்டிருக்கிறது. அதோடு இந்தப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஆனால் ரஷ்யாவின் தரப்பில் முதலில் உக்ரைனின் இராணுவ நிலைகளை அழிப்பது மட்டுமே தன்னுடைய இலக்கு என்று ரஷ்யா உறுதிபட தெரிவித்திருந்தது.

ஆனால் நாட்கள் செல்ல, செல்ல, அந்த நாட்டிலுள்ள முக்கிய பகுதிகளை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தொடங்கியது ரஷ்யப் படைகள்.

ராணுவ நிலைகளை மட்டுமே அழிப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்த ரஷ்யப் படைகள் இந்த தாக்குதலில் தற்போது உக்ரைன் நாட்டு பொதுமக்களையும் கொன்று குவித்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்ந்து வருவதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் ஆயுத மற்றும் நிதி உதவியை உக்ரைனுக்கு வழங்கி வருகின்றன. அதோடு ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்திருக்கின்றனர்.

ஆனாலும்கூட ஐரோப்பாவின் எரிபொருள் தேவை பெரும்பாலும் ரஷ்யாவை நம்பியே இருந்து வருகிறது. ஜெர்மனி போன்ற நாடுகள் தங்களுக்கு தேவைப்படும் 35 சதவீதத்திற்கும் அதிகமான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்துதான் வாங்குகின்றன.

இதன் காரணமாக, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகள் ரஷ்யா மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உக்ரைன் மேற்கத்திய நாடுகள் விளையாடுவதை நிறுத்திவிட்டு முழுமையான தடைகளை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

இப்படியான சூழ்நிலையில், இந்த வருடம் இறுதிக்குள் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெயில் 90 சதவீதத்தை நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு செய்திருக்கின்றன என சொல்லப்படுகிறது.

பெல்ஜியத்தில் இன்று நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முடிவு குறித்து அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ஐரோப்பிய சந்தைகளில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.