ஈரோடு இடைத்தேர்தல் நாளை தொடங்கும் வேட்பு மனு தாக்கல்! அதற்கான பணிகள் தீவிரம்!  

0
222

ஈரோடு இடைத்தேர்தல் நாளை தொடங்கும் வேட்பு மனு தாக்கல்! அதற்கான பணிகள் தீவிரம்! 

ஈரோடு மாவட்டத்தில் கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வேட்பா மனு தாக்கல் நாளை தொடங்க இருக்கிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானதை எடுத்து அந்த தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் விதிகள் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் இவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் தனித்தனியாக போட்டியிடுவதாக அறிவித்தன. ஆனால் அந்த அணிகளிலும் வேட்பாளரை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பாஜக கட்சியை பொறுத்தவரை எந்த அணிக்கு ஆதரவு அல்லது தனித்து போட்டியா? என்ற நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை என தெரிகிறது. நாம் தமிழர் கட்சி, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளரை தேர்வு செய்து விட்டன. சமத்துவ மக்கள் கட்சி மற்றும் பாமக இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் அறிவித்துவிட்டன.

இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை செவ்வாய்க்கிழமை தொடங்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 100 மீட்டர் தூரத்திற்கு எல்லை கோடுகளும், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான வழிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

இவிகேஎஸ் இளங்கோவன் வருகின்ற பிப்ரவரி 3ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார். தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்த் புதன்கிழமையும் அமமுக வேட்பாளர் சிவப்பிரசாந்த் வருகின்ற 3-ஆம் தேதியும் தாக்கல் செய்ய இருக்கிறார்கள். வருகின்ற 7-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.  8- ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படுகிறது. 10-ஆம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் திரு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது.

பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தலும் மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.