அனுமதி கேட்ட எதிர்கட்சித் தலைவர் உடனே ஓகே சொன்ன ஆளுநர்! திமுக அரசுக்கு எதிராக கட்டம் கட்டும் அதிமுக!

0
88

ஏற்கனவே தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருக்கின்ற திமுக மீது மத்திய அரசு கடும் கோபத்தில் இருக்கிறது. அதாவது, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும் திமுக தங்களுடைய திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது என்ற விமர்சனம் பொதுவாக இருந்து வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் என்ன நடந்தாலும் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு என்பதை போல பல இடங்களில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரையில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அதன் விளைவாகத்தான் காசியில் நடைபெற்ற தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு கூட முதல்வர் ஸ்டாலின் அவர்களை அழைக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு பாஜகவின் கொள்கையை திமுக மிக கடுமையாக எதிர்த்து வருகிறது. இவை அனைத்தும் சேர்ந்துதான் தமிழக அரசின் மீதும் முதலமைச்சர் மீதும் மத்திய அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் கடுப்பில் இருப்பதற்கு காரணமாக இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசின் காலை வார காத்திருக்கிறது மத்திய அரசு.
இந்த நிலையில் தான் சமீப காலமாக தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு, கார் வெடிப்பு சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

அத்துடன் இந்த அசம்பாவிதங்கள் நடைபெற்றதற்கு முழுக்க முழுக்க மாநில அரசின் கவனக்குறைவு தான் காரணம் என்று தமிழக பாஜக கடுமையாக விமர்சனம் செய்தது. மேலும் கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு முகமை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. அந்த விசாரணையில் பல்வேறு உண்மைகள் தெரிய வந்திருக்கின்றன.

இந்த நிலையில் தான், தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக குற்றம் சாட்டே இருக்கின்ற எதிர்க்கட்சியான அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போதை பொருட்கள் விற்பவர்கள், சமூக விரோதிகள், தீவிரவாதிகள் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் அனைவரும் உரிமம் பெற்றதை போல சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்று குற்றம் சுமத்தி இருந்தார்.

அதோடு தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறதோ அப்போதெல்லாம் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டு சட்டம், ஒழுங்கு சீர்கேட்டின் கதவுகள் திறக்கப்படுகின்றன என்று தெரிவித்து இருக்கின்ற அவர், திமுக தொண்டர்கள் முதல், தலைவர்கள் வரையில் பொது மேடையிலேயே காவல்துறையினர் பாதுகாப்புக்காக இருக்கும்போதே பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

அதோடு நான் கடந்த இரண்டு பற்றிக் கூட்டத் தொடர்களிலும் பேசும்போது தமிழகத்தில் நடந்த பல போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக குறிப்பிட்டு பேசினேன்.

குறிப்பாக தனியாக வசிக்கும் முதியவர்கள் மீது தொடுக்கப்படும் கொலை வெறி தாக்குதலை குறிப்பிட்டு, தமிழக மக்கள் பாதுகாப்பாக வாழ தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி இருந்தேன்.

மேலும் இந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தான், தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை இன்று மதியம் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு பேச உள்ளார். அப்போது திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பான பட்டியலை ஆளுநரிடம் அவர் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.