50,000 பெண்களுக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சி

0
70

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சாவூர் மண்டல அலுவலகம், தஞ்சாவூர் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து ஜனவரி 24 ஆம் தேதி தஞ்சாவூரில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தின. 

     இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான திரு கர்னம் சேகர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர்கள் திரு கே சுவாமிநாதன், திரு அஜய் குமார் ஸ்ரீவத்சவா, வங்கியின் பொது மேலாளர் திரு சுஷில் சந்திர மொகந்தா, தலைமை மண்டல மேலாளர் திரு கே எஸ் லஷ்மி நரசிம்மன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். 

     தமிழகத்தைச் சேர்ந்த 11 முக்கிய மாவட்டங்கள், கேரளாவைச் சேர்ந்த திருவனந்தபுரம் ஆகியவற்றில் உள்ள ஐ ஓ பி-யின் பல்வேறு சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த 50,000 பெண் பயனாளிகளின் சாதனைகளை பாராட்டும் வகையில், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  தையல் தொழில், பின்னல் வேலை, அழகுக்கலை, அப்பளம், ஊறுகாய், மசாலாத் தூள் தயாரிப்பு, காகிதப் பைகள் தயாரிப்பு, கோழிப் பண்ணை, பால் பண்ணை, மண்புழு உர உற்பத்தி போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களில் பெண் பயனாளிகளுக்கு பல்வேறு மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

     பயிற்சிப் பெற்று தொழிலில் சிறந்து விளங்கும் பயனாளிகள் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.  தங்களது வெற்றிக் கதைகளை அவர்கள் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பயனாளிகள் இதில் கலந்து கொண்டனர்.  பல்வேறு திட்டங்களின் கீழ், ரூ.3.26 கோடி மதிப்பிலான 200 கடன்கள் வழங்கப்பட்டன.  பயனாளிகள் தயாரித்த பொருட்களின் சுமார் 30 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டன.