அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்! அமைச்சர் பேச்சு!!

0
44

அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும்! அமைச்சர் பேச்சு!!

கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்த மாதம் இறுதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் மருத்துவக்குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதில், ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் பிப்ரவரி 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளது. தேர்வுகள் முடிந்த பிறகு கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கல்லூரிகளில் ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் கொரோனா பரவலால் பிப்ரவரி 1-ஆம் தேதி ஆன்லைன் வழியாக நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ள நிலையில், இதன் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஆன்லைன் தேர்வில் மாற்றம் ஏற்படுமா என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது.

ஆகவே, இதுபற்றி நான் முதல்வர் ஸ்டாலினிடம் பேசினேன். அப்போது, அவர் கல்லூரிகளில் முதல், மூன்றாம் மற்றும் ஐந்தாம் பருவ செமஸ்டர் தேர்வுகள் ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைன் வழியாகவே நடைபெறும் என தெரிவித்தார். எனவே  ஆன்லைன் தேர்வுகள் நடைபெறுவதில் எந்தவித மாற்றமும் இல்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K