வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தா? தேர்தல் ஆணையம் சற்று முன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மத்திய அரசை தீர்மானிக்கும் மக்களவைக்கான தேர்தல் வரும் 18 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது.இதில் திமுக மற்றும் காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக,பாமக,பாஜக மற்றும் தேமுதிக சார்பாக மற்றொரு அணியும் எதிரெதிராக இந்த தேர்தலை சந்திக்கின்றன.மேலும் தினகரன் மற்றும் சசிகலா ஆரம்பித்த அமமுக, சீமானின் நாம் தமிழர் கட்சி,நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மைய்யம் போன்ற கட்சிகள் தனியாக தேர்தலை சந்திக்கின்றன.இந்நிலையில் வேலூர் தொகுதிக்கு தேர்தல் ரத்தாகும் என்ற வதந்தி சில தினங்களாக பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் வேலூர் தொகுதியில் லோக்சபா தேர்தலை ரத்து செய்ய உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என தேர்தல் கமிஷன் சற்று முன் தெரிவித்துள்ளது.

வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருவதாக மீடியாக்களில் செய்தி பரவியது. இதனையடுத்து இது தொடர்பாக தேர்தல் கமிஷன் இன்று (ஏப்.,16) விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ஷேய்பாலி ஷரன் கூறுகையில், இதுவரை அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர் லோக்சபா தொகுதியில் ஏப்.,18 அன்று தேர்தல் நடக்க உள்ளது. இதன் முடிவுகள் மே 23 ல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டின் படி வேலூரில் அதிமுக – திமுக கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.சி.ஷண்முகமும், திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில் கடந்த மாதம் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. கதிர் ஆனந்திற்கு சொந்தமான இன்ஜினியரிங் கல்லூரியிலும் சோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த தொகுதியில் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.