தேர்தல் தோல்வியால் தொடர்ந்து வெளியேறும் அமமுக நிர்வாகிகள் கலக்கத்தில் தினகரன்

தேர்தல் தோல்வியால் தொடர்ந்து வெளியேறும் அமமுக நிர்வாகிகள் கலக்கத்தில் தினகரன்

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தலில் தினகரனின் அ.ம.மு.க. படுதோல்வி அடைந்ததையடுத்து தொடர்ந்து  அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலோனோர் அதிக அளவில் அ.தி.மு.க வில் சேர்ந்து வருகின்றனர். இது அமமுகவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னால் தமிழக முதல்வரான ஜெயலலிதாவின் மறைவையடுத்து அவரது தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றதால் அவருக்கு தமிழக மக்களிடம் செல்வாக்கு இருப்பதாக அதிமுகவினரும் அவரது ஆதரவாளர்களும் நம்பினர். ஆனால் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபைக்கான  இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அமமுக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஆனால், இந்த தேர்தல் முடிவு அமமுகவிற்கு சோதனையாக அமைந்தது. அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட அக்கட்சி 5 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றது. எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை மேலும் இரண்டாமிடத்திற்கும் வர முடியவில்லை. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் தொகையை கூட பறி கொடுத்தது. இதைக்கண்ட  தினகரன் ஆதரவாளர்கள் இனிமேலும் அவருடன் இருந்தால் அவர்களுக்கான அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என முடிவெடுத்து தாய் கழகமான அ.தி.மு.க.,வில் சேர துவங்கி உள்ளனர்.

இந்த வாரத்தில் அமமுகவின் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த  புறநகர் மாவட்ட செயலர், பாப்புலர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன், மாநில இளைஞர் அணி துணை செயலர், சின்னத்துரை, புறநகர் வடக்கு மாவட்ட துணை செயலர், ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து அதிமுகவில் சேர்ந்தனர்.

அவ்வாறே தர்மபுரியை சேர்ந்த மாவட்ட இளைஞர் அணி செயலர், முனுசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலர், அசோக்குமார், அரூர் பேரூராட்சி செயலர், திருவேங்கடம், மாவட்ட இலக்கிய அணி இணை செயலர், பிரேம்குமார் மற்றும் நிர்வாகிகளும் அதிமுகவில் இணைந்தனர். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தெற்கு மாவட்ட பேரவை செயலர், பாலசுப்ரமணியன், இணை செயலர், ராஜாராம், திருவண்ணாமலை ஒன்றிய செயலர், அப்பாதுரை, நகரச் செயலர், பாஸ்கர் மற்றும் பல நிர்வாகிகளும் அமமுகவை விட்டு விலகி அதிமுகவில் இணைந்தனர்.

இவ்வாறு தேர்தல் தோல்வியை தொடர்ந்து அமமுக நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறி வருவதால் விரைவில் கட்சியே காணாமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

Copy
WhatsApp chat