முன்னாள் அமைச்சர்கள் செய்கையால் குழப்பமாகும் தொண்டர்கள்! அதிமுக தலைமை வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
108

அதிமுகவில் ஒற்றுமை தலைமை விவகாரம் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்ற நிலையில், தற்போது மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு இருதரப்பு தலைமையும் முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதாவது அதிமுகவில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாகவே மறைமுகமாக இருந்து வந்த அதிகார மோதல் தற்போதைய சூழ்நிலையில், பூதகரமாக வெடித்து கிளம்பி இருக்கிறது. ஆகவே கட்சி மறுபடியும் இரண்டாக பிரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வம் அதிரடி நீக்கம், எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டது, பொதுச்செயலாளர் தேர்வு என அடுத்தடுத்து பல்வேறு அதிரடி முடிவுகளை அதிமுகவில் எடுத்து வருகின்ற நிலையில், இன்னும் ஒரே ஒரு விவகாரம் தான் இது அனைத்திற்கும் முடிவு கட்டப் போகிறது.

அதிமுகவின் பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி அமர்வில் பன்னீர்செல்வம் தரப்பு தொடர்பாக தீர்ப்பு வந்த நிலையில், அதனை எதிர்க்கும் விதமாக 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்தார்.

அந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவு கிடைத்துள்ளதால் மறுபடியும் அதிமுகவில் அவருடைய செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. அதே சமயத்தில் பன்னீர்செல்வம் தரப்புக்கு இது மிகப்பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது.

ஆகவே உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை எதிர்க்கும் விதமாக பன்னீர்செல்வம் தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். பல நிகழ்வுகள் பன்னீர்செல்வத்திற்கு எதிராகவே இருக்கின்ற நிலையில், இந்தத் தீர்ப்பும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவே இருக்கும் என தெரிவிக்கிறார்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள்.

அதே நேரம் தங்களுடைய தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கு அதீத சாத்தியக் கூறுகள் உள்ளதாக பன்னீர்செல்வம் தரப்பினர் தெரிவித்து வருகிறார்கள். இவ்வாறு 2 தரப்பு நிர்வாகிகளும் மாறி, மாறி பேசுவதில் அதிமுகவில் அடிமட்ட தொண்டர்களாக இருப்பவர்கள் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாத பொருளாக எழுந்திருக்கிறது.

இப்படியான ஒரு நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தலைநகர் டெல்லியில் பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சரமான அமித்ஷாவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார்.

அரசியல் தொடர்பாக பேசவில்லை என்று அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தாலும், அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தான் இந்த பேச்சில் பிரதானமாக இடம் பெற்றது என்ற விவரம் அதிமுகவினர் மூலமாகவே கிடைக்கப் பெற்றதாக தெரிகிறது.

அந்த சமயத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்ட இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அமித்ஷா தெரிவித்ததாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

ஆனாலும் இதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர்கள் முற்றிலுமாக மறுத்திருக்கிறார்கள்.

ஆகவே தான் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பு நிர்வாகிகளுக்கு 2 தரப்பு தலைமைகளும், முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.

அதாவது முன்பை போலவே அதிமுகவில் மறுபடியும் இணைவதற்கான சாத்திய கூறுகள் சற்றே துளிர்விட ஆரம்பித்திருப்பதாக மேற்கு மண்டல நிர்வாகிகள் அமித்ஷாவின் பேச்சில் இது வெளிப்படையாக தெரிந்ததாக தெரிவிக்கிறார்கள்.

அதே நேரம் பன்னீர்செல்வம் தரப்பு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, முன்னாள் அமைச்சர்கள் ஆவேசமாக பேசினால் தொண்டர்கள் இடையே தேவையற்ற குழப்பம் ஏற்படும் என்பதால் யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம்.

எனவே இதன் காரணமாக தான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது கடந்த சில தினங்களாக ஆவேசமாக பேசி வந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர் அமைதி காக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

தேனியில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்ற கூட்டத்தில் பன்னீர்செல்வம் தொடர்பாக பேசுங்கள் என்று தொண்டர்கள் வெளிப்படையாகவே கேட்ட நிலையில், அவர் தொடர்பாக திண்டுக்கல் சீனிவாசன் ஒரு வார்த்தையை கூட பேசவில்லை எனவும், சொல்லப்படுகிறது.