வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை

0
95

வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை

அதிமுக அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி டி. பிராபகர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த ஜே. சி. டி பிராபகர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நாளன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பன்னீர்செல்வம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்ததாகவும், அடியாட்களுடன் அலுவலகம் முன் கூடிய எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களான தி நகர் சத்யா, விருகை ரவி, ஆதி ராஜாராம் ஆகியோர் தங்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்ததாக கூறியுள்ளார்.

மேலும் கத்தி, பாட்டில்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தங்களை தாக்கியதாகவும் குறிபிட்டுள்ளார். இதுசம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பின், அலுவலகத்துக்குள் உள்ள முக்கிய ஆவணங்களை பாதுகாக்கவே, அவற்றை பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்து வந்து அவரது வாகனத்தில் வைத்ததாகக் கூறியுள்ளார்.

நடந்த உண்மை இவ்வாறு இருக்க, தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக அளித்த புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உள்துறை செயலாளர், டிஜிபி , ராயப்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் சென்னை சிபிசிஐடி ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

author avatar
CineDesk