குஜராத்தில் தமிழ் பள்ளியை மூட கூடாது என முதல்வர் கடிதம்! சாதித்துக் காட்டிய மருத்துவர் ராமதாஸ்

0
59

குஜராத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வழியிலான பள்ளியை மூட கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  குஜராத் மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மாணவர்களின் சேர்க்கையை காரணமாக வைத்து குஜராத்தில் பிரதமர் மோடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் செயல்பட்டு வந்த தமிழ் வழியிலான பள்ளியை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தமிழ் ஆர்வலர்கள் பலர் இந்த உத்தரவை எதிர்த்து போராட்டத்தை அறிவித்தனர்.

இந்நிலையில் இதை அறிந்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மாணவர் சேர்க்கை காரணமாக வைத்து பள்ளியை மூடும் இந்த உத்தரவை தடை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து தமிழக முதல்வர் குஜராத் மாநில முதல்வருக்கு கடிதம் எழுத வேண்டும்  என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது குறித்த செய்தியை படிக்க: குஜராத்தில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளியை திறக்க வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள்

இதனையடுத்து அவரது வேண்டுகோளை ஏற்கும் வகையில் குஜராத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வழியிலான பள்ளியை மூட கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குஜராத் மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது.

குஜராத்தின் அகமதாபாத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் வழியில் கல்வி அளித்து வந்த பள்ளி, குறைவான வருகைப்பதிவைக் காரணம் காட்டி, திடீரென மூடப்பட்டிருப்பதை அறிந்து நான் வருத்தப்படுகிறேன். இதனால், தமிழ்க் குழந்தைகள் கல்வி கற்பதற்கு வேறு வழியில்லாமல் நிற்கின்றனர்.

தமிழ் மொழி மிகப்பெரும் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைக் கொண்ட பண்டைய மொழியாகும். தமிழர்கள் குஜராத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளனர், பங்காற்றி வருகின்றனர். குஜராத்தில் உள்ள தமிழ் மொழி சிறுபான்மையினரின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதனால், இந்த விஷயத்தில் நீங்கள் நேரடியாகத் தலையிட்டு, தமிழ்வழிப் பள்ளி தொடர்ந்து செயல்பட உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். அகமதாபாத்தில் உள்ள தமிழ்வழிப் பள்ளி தொடர்ந்து செயல்பட ஆகும் மொத்த செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது.

தமிழ் மொழி சிறுபான்மையினரின் கல்வி உரிமையை குஜராத் அரசு பாதுகாக்கும் என நான் நம்புகிறேன். இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன் என்றும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

author avatar
Ammasi Manickam