40 ஆண்டு கால வேதனை மகிழ்ச்சியாக மாறியது-ராமதாஸ் பெருமிதம்

0
139
Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today
Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

40 ஆண்டு கால வேதனை மகிழ்ச்சியாக மாறியது-ராமதாஸ் பெருமிதம்

40 ஆண்டுகளுக்கு பிறகு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அடுத்து நடக்கவுள்ள 2024 பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்ல வேண்டுமென்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய வாழ்த்தையும், விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்

பல்வேறு சவாலுக்கு மத்தியில் இந்திய ஹாக்கி அணியானது நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. லீக் சுற்றில் சிறப்பாக விளையாடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி அடுத்து காலிறுதியில் பிரிட்டனுடன் மோதி அந்த அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. அடுத்ததாக அரையிறுதி போட்டியில் மிகவும் அனுபவம் வாய்ந்த பெல்ஜியம் அணியுடன் மோதி எதிர்பாராதவிதமாக தோல்வியை தழுவியது. இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

Image

இதனையடுத்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி ஜெர்மனியுடன் ஆடியது. இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றி பெறும் முனைப்புடன் மிகச்சிறப்பாக விளையாடின. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில் இறுதியாக 5-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. இதற்கு பாரதப் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது.

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிகளில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது எல்லையில்லாத மகிழ்ச்சி அளிக்கிறது. ஹாக்கிப் போட்டிகளில் இந்தியாவின் பதக்கக் கனவை சாத்தியமாக்கிய இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்… பாராட்டுகள்!

ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு. ஆனால், 1980-ஆம் ஆண்டுக்குப் பிறகு 41 ஆண்டுகளாக ஹாக்கியில் நம்மால் பதக்கம் வெல்ல முடியாதது வேதனையாகவே இருந்து வந்தது. இன்றைய வெற்றியின் மூலம் வேதனை மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் மாறியிருக்கிறது!

2024 பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று இழந்த பெருமையை முழுமையாக பெற வேண்டும். அந்த அணியில் தமிழகம் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பம். அது நிச்சயமாக நிறைவேறும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.