மருத்துவர் ராமதாஸை ஆதரிக்கிறாரா திமுக பொருளாளர் துரைமுருகன்? உச்சகட்ட குழப்பத்தில் ஸ்டாலின்

மருத்துவர் ராமதாஸை ஆதரிக்கிறாரா திமுக பொருளாளர் துரைமுருகன்? உச்சகட்ட குழப்பத்தில் ஸ்டாலின்

வன்னிய சமுதாயத்துக்கு திமுக செய்த நன்மைகள் பற்றி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டு, அக்டோபர் 7ஆம் தேதி ஓர் அறிக்கை விட, அதற்கு எதிராக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விரிவான அறிக்கை வெளியிட்டார்.

அதில் வன்னிய சமுதாயத்தை திமுக ஆட்சி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எப்படியெல்லாம் அணுகியது என்று குறிப்பிட்ட டாக்டர் ராமதாஸ், ஒருபடி மேலே போய் தற்போது திமுக பொருளாளராக இருக்கும் துரைமுருகன் வன்னியர் என்றாலும் அவருக்கு உரிய அதிகாரங்கள் அளிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.

“இப்போதுதான் வேறுவழியின்றி திமுகவின் பொருளாளராக துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கும் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. பெயரளவில் மட்டும்தான் அவர் பொருளாளராகப் பதவி வகிக்க, அந்தப் பதவிக்கு உரிய அதிகாரங்கள் அனைத்தையும் மு.க.ஸ்டாலினைச் சுற்றியுள்ள அவரது துதிபாடிகள்தான் அனுபவிக்கிறார்கள்” என்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார் ராமதாஸ்.

ஏற்கெனவே திமுகவில் உள்ள வன்னியர் சமூகத் தலைவர்களுக்கும் பாமக தலைவர் ராமதாஸுக்கும் கட்சி அரசியலைத் தாண்டிய ஒரு நட்பும் உறவும் இருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாமகவுடன் திமுக அதிகாரபூர்வமற்ற பேச்சு நடத்தவும் இந்த உறவு பயன்பட்டது.

இந்த நிலையில் ராமதாஸின் அறிக்கைக்கு வழக்கம்போல திமுக சார்பில் அதன் பொருளாளராக இருப்பவரும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவருமான துரைமுருகன் மூலம் பதில் அறிக்கை வெளியிடப்படாமல், கடலூர் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாயிலாக ராமதாஸுக்கு மறுப்பறிக்கை வெளியிட்டிருக்கிறது திமுக. அதுவும் இன்று முரசொலியில் முதல் பக்கத்தில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டுள்ளது.

திமுகவுக்கும் வன்னிய சமுதாயத்துக்கும் இடையே உள்ள புரிந்துணர்வும் உறவும் குறித்து துரைமுருகன் நன்கறிந்தவர். அதுமட்டுமல்ல… ராமதாஸ் அந்த அறிக்கையில் துரைமுருகன் பெயரைப் பகடைக்காயாகப் பயன்படுத்த முயற்சி செய்திருப்பதால், இந்த விவகாரத்தில் துரைமுருகனே பதில் அறிக்கை கொடுப்பார் என திமுகவில் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், துரைமுருகனுக்குப் பதில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்தான் பதில் அறிக்கை கொடுத்தார்.

இதுபற்றி திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “ஏற்கனவே துரைமுருகனுக்கும் ஸ்டாலினுக்கும் இடையே ஓர் இடைவெளி நிலவுவது விவரம் தெரிந்த பலருக்கும் தெரிந்த சங்கதிதான். இதை அறிந்து வன்னியர் என்பதை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி திமுக தலைமை கழகம் மீதே கல்லெறிந்து இருக்கிறார் ராமதாஸ்.

ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் ராமதாஸுக்கு எதிராக தன்னால் அறிக்கை கொடுக்க இயலாது என துரைமுருகன் மறுத்ததாகவும் தகவல்கள் வந்தன. இந்தப் பின்னணியில்தான் இப்போது ராமதாஸுக்கு எதிராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மறுப்பறிக்கை கொடுத்துள்ளார்.

கட்சி அளவில் அறிக்கை விடவில்லை என்றாலும் ராமதாஸ் திமுகவில் தனக்கு முழு அதிகாரங்கள் தரப்படவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளதற்கு எதிராகவாவது துரைமுருகன் கருத்து தெரிவித்து இருக்க வேண்டும். ஆனால், துரைமுருகன் சார்பில் அப்படி எந்த ரியாக்‌ஷனும் வரவில்லை. இதன் மூலம் தனக்கு திமுகவில் அதிகாரம் இல்லை என்பதை உறுதி செய்ய ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்கிறாரோ துரைமுருகன் என்ற விவாதமும் திமுகவுக்குள் நிலவி வருகிறது” என்கிறார்கள்.

Copy
WhatsApp chat