சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறையின் உச்சம்! கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய மருத்துவர் ராமதாஸ் 

0
68
Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today
Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறையின் உச்சம்! கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கிய மருத்துவர் ராமதாஸ்

கவுரவ விரிவுரையாளர்களின் போராட்ட உரிமையை மதிக்காமல், போராட்டத்தில் ஈடுபடும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கப்பட வேண்டும்; அவர்கள் மீண்டும் பணி கோரினால் வழங்கக்கூடாது; அவர்களுக்கு அனுபவச் சான்றிதழ் கூட வழங்கக்கூடாது என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் முனைவர் ம.ஈஸ்வரமூர்த்தி அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் ஆணையிட்டிருப்பது சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறையின் உச்சம் ஆகும். மாறாக, போராட்டம் நடத்தும் கவுரவ விரிவுரையாளர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்” என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிலைப்பு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசாணை எண் 56-இன்படி தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி நிலைப்பு வழங்க வேண்டும்; ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு தகுதி பெறுவதற்காக மாநில தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும்; போட்டித் தேர்வு நடத்தாமல், கல்வித் தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பணி நிலைப்பு வழங்க வேண்டும் ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரு நாட்களாக நுழைவாயில் முழக்கப் போராட்டம் நடத்தி வரும் கவுரவ விரிவுரையாளர்கள், இன்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

கவுரவ விரிவுரையாளர்களின் மேற்கண்ட 4 கோரிக்கைகளும் நியாயமானவை தான். தமிழகத்தில் 163 அரசு கலைக் கல்லூரிகளில் குறைந்த ஊதியத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 5583 கவுரவ விரிவுரையாளர்கள், பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் தான் போராட்ட ஆயுதத்தை கைகளில் ஏந்தியுள்ளனர். 2006-ஆம் ஆண்டு வாக்கில் பணியமர்த்தப்பட்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று 2010-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி உறுதியளித்திருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில், கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கும் நோக்குடன், 2021 பிப்ரவரி 15,16,17,18 ஆகிய நாட்களில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதற்காகத் தான் அரசாணை எண் 56 பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அது தடைபட்டது. புதிய அரசு பதவியேற்ற பிறகும் கூட கவுரவ விரிவுரையாளர்கள் பணி வரன்முறை செய்யப்படுவர் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் அது செயல்படுத்தப்படாத நிலையில் தான், அதை நினைவூட்டும் நோக்கில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அது அவர்களின் ஜனநாயக உரிமை ஆகும்.

கவுரவ விரிவுரையாளர்களின் போராட்ட உரிமையை மதிக்காமல், போராட்டத்தில் ஈடுபடும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கப்பட வேண்டும்; அவர்கள் மீண்டும் பணி கோரினால் வழங்கக்கூடாது; அவர்களுக்கு அனுபவச் சான்றிதழ் கூட வழங்கக்கூடாது என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் முனைவர் ம.ஈஸ்வரமூர்த்தி அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் ஆணையிட்டிருப்பது சர்வாதிகாரம் மற்றும் அடக்குமுறையின் உச்சம் ஆகும். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தும் போது அவர்களை அழைத்துப் பேசுவதையும், அவர்களின் கோரிக்கைகளை ஏற்பது மட்டுமின்றி, போராடிய நாட்களை பணி செய்த நாட்களாக அறிவித்து ஊதியம் வழங்குவதையும் அரசு கொள்கையாகக் கொண்டுள்ளது. அவ்வாறு இருக்கும் போது, போராடும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நீக்க கல்லூரி கல்வி இயக்குநர் ஆணையிட்டிருப்பது அரசின் கொள்கைகளுக்கு எதிரானது.

இது தொடர்பாக கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை சமூக ஊடகங்களில் வலம் வரும் நிலையில், கல்லூரி கல்வி இயக்குனர் அப்படி ஓர் ஆணை பிறப்பிக்கவில்லை என்று உயர் கல்வித் துறை செயலாளர் முனைவர் கார்த்திகேயன் விளக்கமளித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கவுரவ விரிவுரையாளர்களின் போராட்டத்தை எதிர்கொள்வதில் உயர் கல்வித் துறையின் பல்வேறு நிலை அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது.

கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாதவையோ, முன்வைக்கக் கூடாதவையோ அல்ல. அவை அனைத்தும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்தவை தான். கவுரவ விரிவுரையாளர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு கால கட்டத்தில் பணி நிலைப்பு செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் பணியில் சேர்ந்தவர்கள் தான். அவர்களில் பலரது வயது 50-ஐ கடந்து விட்ட நிலையில், அவர்களால் வேறு எங்கும் பணிக்கு செல்ல முடியாது. மேலும், கவுரவ விரிவுரையாளர்களில் 80 விழுக்காட்டினர் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்த கல்வித் தகுதியை பெற்றுள்ளனர். அவர்களை பணி நிலைப்பு செய்வதால் அரசு கல்லூரிகளில் கல்வித் தரம் எவ்வகையிலும் பாதிக்கப்படாது.

எனவே, நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநீக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை ரத்து செய்யப்பட வேண்டும். மாறாக, போராட்டம் நடத்தும் கவுரவ விரிவுரையாளர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.