தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர இதை செய்ததாக வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

0
68
Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021
Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர இதை செய்ததாக வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர
பெட்ரோல் குண்டு கலாச்சாரத்திற்கு
உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கோவை உட்பட தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன. தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான இந்த வன்முறை நிகழ்வுகள் கட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு மாறாக, பிற பகுதிகளுக்கு பரவி வருவது மிகுந்த கவலையளிக்கிறது.

கோவை காந்திபுரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது கடந்த 22-ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், நல்வாய்ப்பாக அந்த குண்டு வெடிக்காததால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. அதனால், பொதுமக்களும், காவல்துறையினரும் நிம்மதியடைந்த நிலையில், கோவை மாவட்டத்திலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இத்தகைய பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது தான் மக்களின் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

கோவையில் தொடங்கிய பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு பரவியிருக்கின்றன. கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் சென்னை சிட்லபாக்கம், சேலம், கன்னியாகுமரி என தமிழகத்தின் அனைத்து திசைகளில் இருந்தும் பெட்ரோல் குண்டு வீச்சு குறித்த செய்திகள் வருவதை அலட்சியப்படுத்த முடியாது. இந்தத் தாக்குதல்களில் மனித உயிர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் கூட பொது சொத்துகளும், தனிநபர் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அடுத்து என்ன நிகழுமோ? என்பது குறித்த அச்சம் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களின் மக்களிடம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது.

தமிழகத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று தமிழகம் அமைதிப்பூங்கா என்பது தான். இந்திய விடுதலைக்கு முன்பும், பின்பும் தமிழகத்தை ஆட்சி செய்த அனைத்து முதலமைச்சர்களும் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக பராமரித்ததை தங்களின் சாதனைகளில் ஒன்றாக குறிப்பிட்டு வருவதை நாம் அறிவோம். அமைதிப் பூங்கா என்ற தமிழகத்தின் பெருமைக்கு பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் குந்தகத்தை ஏற்படுத்தி விடக் கூடாது. பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் 20&க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன; அவற்றின் சி.சி.டி.வி காட்சிகளும் பெளியாகியுள்ளன. இவ்வளவுக்குப் பிறகும் ஓரிருவரைத் தவிர, பெட்ரோல் குண்டு குற்றவாளிகள் கைது செய்யப்படாதது கவலை அளிக்கிறது. பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபடுவோர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த அறிவிப்புகள் மட்டுமே நிலையை கட்டுக்குள் கொண்டு வந்து விடாது; கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

தமிழ்நாட்டின் அமைதி, வளர்ச்சி, தொழில் முதலீடுகளை ஈர்த்தல் உள்ளிட்ட அனைத்திற்கும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு தமிழக அரசு விரைந்து முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.