மக்களின் அலட்சியத்தால் குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0
84
Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today
Dr Ramadoss-News4 Tamil Latest Political News Today

மக்களின் அலட்சியத்தால் குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வரும் இந்நிலையில் இந்திய அரசு இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி அறிவித்த இந்த ஊரடங்கை மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது.

மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு அளிக்கும் விதமாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இந்நிலையில் ஒரு சில அரசின் இந்த ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றி வருவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை நடந்த கொரோனா மரணத்தில் நடந்த பெரும்பாலோனோர் குழந்தைகள் தான் என்றும் அதற்கு பெரியவர்களின் அலட்சியமே என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் “கொரோனாவுக்கு 104 குழந்தைகள் பாதிப்பு: குடும்பம் காக்கவாவது ஊரடங்கை மதிப்பீர்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1821 பேரில் 104 பேர் 12 வயதுக்கும் குறைந்த குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது. ஒரு தவறும் செய்யாத குழந்தைகள் குடும்பத்தினரின் அலட்சியத்தால் கொரோனா வைரஸ் நோய் கொடுமைக்கு ஆளாகியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2 முதல் 9 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் கொரோனா வைரஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இதுவரை 55 ஆண் குழந்தைகள், 49 பெண் குழந்தைகள் என மொத்தம் 104 குழந்தைகள் கொரோனா வைரஸ் நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும் பொது சுகாதாரத்துறையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமிருந்து நோய்த் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாவது மிகவும் கொடுமையானது ஆகும். வழக்கமாக கோடைக்காலத்தில் வெயில் கொடுமையால் குழந்தைகள் சிரமப்படுவார்கள்; இப்போது கூடுதலாக கொரோனா நோயையும் தாங்குவது இன்னும் அவதியாக இருக்கும். குழந்தைகளின் இந்த நிலை மிகவும் வேதனையளிக்கிறது.

குழந்தைகளின் இந்த நிலைக்கு யார் காரணம்? என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்த நிலைக்கு நிச்சயம் குழந்தைகள் காரணமல்ல… அவர்கள் நிச்சயமாக ஊரடங்கை மீறி வெளியில் சுற்ற மாட்டார்கள். அவர்களின் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் ஊரடங்கை பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றி, அதன் விளைவாக வாங்கி வந்த கொரோனா வைரஸ் நோயை குடும்பத்தினரிடமும் பரப்பியதன் மூலமாகத் தான் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அனைவரும் ஊரடங்கை மதித்து வீட்டில் அடங்கியிருந்தாலோ, வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்திருந்தாலோ குழந்தைகளுக்கு இத்தகைய நோய்த்தொற்று பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.

மற்றொருபுறம், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கி விற்பனை செய்து வரும் வணிகர் ஒருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து அவரது குடும்பத்தினர் 6 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்றியுள்ளது. கடந்த சில வாரங்களாக கோயம்பேடு சந்தைக்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோயம்பேடு சந்தையில் 4000 காய்கறி கடைகள், 3500 பழக்கடைகள், 2500 மலர்க் கடைகள் என மொத்தம் 10,000 கடைகள் உள்ளன. அந்தக் கடைகளில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அங்கு மூட்டைத் தூக்கும் தொழிலாளர்கள் மட்டும் 30,000 பேர் உள்ளனர், வெளியிலிருந்து காய்கறி வாங்க வரும் வணிகர்கள், கொயம்பேடு சந்தையை நம்பி பிற வணிகம் செய்வோர் ஆகியோரையும் கணக்கில் கொண்டால் அங்கு மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அத்தகைய சூழலில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாவிட்டால், கொரோனா பரவுவதை தடுக்க முடியாது என்பதை சந்தை நிர்வாகக் குழுவினரும், வணிகர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.

அதேநேரத்தில் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. கோயம்பேடு சந்தையை மூடிவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள உழவர்கள் கடுமையாக பாதிக்கப் படுவர்; சென்னையில் காய்கறி மற்றும் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே கோயம்பேடு சந்தையில் வணிகர்கள் தொடர்ந்து வணிகம் நடத்தி வருகின்றனர். அவர்களிடமும் கொரோனா பரவல் அச்சம் நிலவி வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் சந்தைக்கு வருவதை தவிர்ப்பது மட்டும் தான் கோயம்பேடு சந்தையில் கொரோனா நோய்ப்பரவல் ஏற்படுவதை தடுக்கும்.

ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு கிட்டத்தட்ட கோயம்பேடு சந்தைக்கு இணையான விலையில் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் காய்கறிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்தால், அரசு சார்பிலும், தனியார் சார்பிலும் இன்னும் குறைவான விலையில் வீடுகளுக்கே காய்கறிகளை கொண்டு சென்று வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கோயம்பேட்டில் மக்கள் குவிவது தேவையற்ற, நோயை விலைக்கு வாங்கும் செயலாகவே அமையும்.

எனவே, சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள அனைவரும் தங்களின் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், சென்னைவாசிகள் கோயம்பேடு சந்தைக்கு செல்வதை தவிர்த்து, அந்தந்த பகுதிகளுக்கு வரும் நடமாடும் கடைகளிலும், ஆன்லைனிலும் காய்கறிகளை வாங்கி, கொரோனா நோய்ப்பரவலுக்கு ஆளாவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Ammasi Manickam