விருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

விருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

மத்திய அரசு செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள மும்மொழி கொள்கையில் விருப்பமில்லாத தமிழக மக்கள் மீது இந்தியை திணிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

அனைத்துப் பள்ளிகளிலும் நடுநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி மொழியைத் திணிக்கும் நோக்கத்துடன் தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு தயாரிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் வரைவு தேசியக் கல்விக் கொள்கையில் வரவேற்கத்தக்க வகையில் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முதற்கட்டமாக ஐந்தாம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் எட்டாம் வகுப்பு வரையிலும் தாய்மொழிவழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது பயனுள்ள பரிந்துரை ஆகும். அதேபோல், பள்ளிக்கல்வியை வேலைவாய்ப்புக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்க பரிந்துரைக்கப்பட்டிருப்பதும் பாராட்டத்தக்கது ஆகும். இவற்றை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.

அதேபோல், தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த பல்வேறு ஒழுங்குமுறை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதும், பள்ளிக்கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும். இதன் மூலம் கல்விக்கட்டணக் கொள்ளைகள் தடுக்கப்படும். அதேபோல், மாணவர்கள் தாங்கள் விரும்பிய நேரத்தில் தேர்வுகளை எழுதலாம்; மதிப்பெண்களை உயர்த்த மறுதேர்வு எழுதலாம் என்ற பரிந்துரைகளும் பயனளிப்பவையாகும்.

அதேநேரத்தில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது. 1968-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்ட கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிவிக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த நடைமுறை தொடர்கிறது. அதன்படி உள்ளூர் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியையும் ஒரு மொழிப்பாடமாக படிப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக இந்நடைமுறை மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் மட்டும் கடைபிடிக்கப் பட்டு வந்த நிலையில், இனிவரும் காலங்களில் மாநிலப்பாடத்திட்ட பள்ளிகளுக்கும் மும்மொழிக் கொள்கை நீடிக்கப்படும் என்று தேசியக் கல்விக் கொள்கையுயில் கூறப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மும்மொழிக் கொள்கையை மாநில பாடத்திட்ட பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்று நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட, கல்வி பெறும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் மும்மொழிக் கொள்கை திணிக்கப்படும் என்பதற்கு அறிகுறிகள் வரைவுக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டு மாணவர்கள் மீது இந்தி மொழியை திட்டமிட்டு திணிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்று மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருப்பதாகவும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது திருப்தியளிக்கிறது.

இந்தி பேசாத மாநிலங்கள் மீது ஒருபோதும் இந்தி திணிக்கப்படாது என்று 55 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமர் நேரு உறுதியளித்திருந்தார். ஆனால், அதை மீறி பள்ளிகள் வாயிலாக இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாணவர்கள் விரும்பி இந்தியைப் படிப்பது வரவேற்கத்தக்கது. மாறாக, இந்தியை கட்டாயப்பாடமாக்கி விருப்பமில்லாத மாணவர்கள் மீதும் திணிப்பதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது; இருமொழிக் கொள்கை தான் தங்களின் நிலைப்பாடு என்று அறிவித்திருக்கும் தமிழக அரசு, அதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். எந்த நிலையிலும் பின்வாங்கக் கூடாது.

மத்திய அரசும் மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அதன் விருப்பங்களை மாநில அரசுகள் மீது திணிக்கக்கூடாது. வரைவு தேசியக் கல்விக் கொள்கையில் மாநிலங்களால் ஏற்றுக் கொள்ளப்படும் விஷயங்களை மட்டுமே மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். குறிப்பாக எட்டாம் வகுப்பு வரை தாய்மொழிவழிக் கல்வியை கடைபிடிக்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்படுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கையை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Copy
WhatsApp chat