அன்புமணி ராமதாசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தொடங்குவதற்கு முன்பே மூடப்படும் அவலநிலை

0
71
Dr Ramadoss Condemned on Integrated Vaccines Complex Closing Issue-News4 Tamil Online News Channel
Dr Ramadoss Condemned on Integrated Vaccines Complex Closing Issue-News4 Tamil Online News Channel

அன்புமணி ராமதாசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தொடங்குவதற்கு முன்பே மூடப்படும் அவலநிலை

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார துறை அமைச்சராக பதவி வகித்த பொது கொண்டு வரப்பட்ட செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவை மூடுவதா? என்றும் இதை அரசே நடத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் கண்டித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.


இந்தியாவின் தடுப்பூசிகள் தேவையை பூர்த்தி செய்வதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் முயற்சியால் செங்கல்பட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்காவை மூட முயற்சிகள் நடப்பதாக வெளிவரும் செய்திகள் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கின்றன. தடுப்பூசி வளாகத்தை மூட மத்திய அரசு தீர்மானித்திருப்பது உண்மை என்றால் அது கண்டிக்கத்தக்கது.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கது சென்னையை அடுத்த செங்கல்பட்டில் தடுப்பூசி பூங்காவும், மருத்துவப் பூங்காவும் கொண்ட மிகப்பெரிய வளாகத்தை அமைப்பது ஆகும். இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி கணிசமாக குறைந்து விட்ட நிலையில், தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உருவானது. அதை தடுத்து இந்தியாவுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரிப்பது தான் இதன் நோக்கமாகும். மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் எச்.எல்.எல் லைஃப் கேர் என்ற பொதுத்துறை நிறுவனத்தின் துணை நிறுவனமான எச்.எல்.எல் பயோடெக் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

மருத்துவர் அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை ரூ.594 கோடியில் செயல்படுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இத்திட்டத்தின் மதிப்பு 2017&ஆம் ஆண்டில் ரூ.710 கோடியாகவும், 2019&ஆம் ஆண்டில் ரூ. 904 கோடியாகவும் அதிகரித்தது. முதற்கட்ட மதிப்பீட்டின்படி ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு தடுப்பூசி பூங்கா அமைக்கப்பட்டு, அதில் தடுப்பூசி மருந்துகளை தயாரிப்பதற்கான உலகத்தரம் வாய்ந்த எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படி கூடுதலான வழங்க வேண்டிய நிதியை ஒதுக்கீடு செய்தால் செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து வளாகத்தில் தடுப்பூசி மருந்து உற்பத்தியை உடனடியாக தொடங்கி விட முடியும்.

Dr Ramadoss Condemned on Integrated Vaccines Complex Closing Issue News4 Tamil Online News Channel

ஆனால், உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்றும், அவ்வளவு முதலீட்டில் தடுப்பூசி பூங்காவை அமைத்தால், அதை லாபத்தில் இயக்க முடியாது என்றும் மத்திய அரசு கூறி விட்டதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து தடுப்பூசிபூங்காவில் பணியாற்றி வரும் 174 பணியாளர்களை அழைத்த நிர்வாகம், அவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க முடியாது என்றும், மாற்று வேலையை பார்த்துக் கொள்ளும்படியும் கூறியிருக்கிறது. அதனால், கனவுத்திட்டமான தடுப்பூசி உற்பத்தி பூங்கா அதன் மருந்து உற்பத்தியை தொடங்குவதற்கு முன்பாகவே மூடப்படும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

தடுப்பூசி உற்பத்திப் பூங்காவை அதன் உயர்த்தப்பட்ட மதிப்பீட்டில் திறந்தால், அதை லாபத்தில் இயக்க முடியாது என்ற மத்திய அரசின் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். தடுப்பூசி உற்பத்தி பூங்காவை ஆய்வு செய்த உலக நலவாழ்வு நிறுவனத்தின் வல்லுனர் குழுவினர் அது உலகத்தரத்தில் அமைக்கப் பட்டிருப்பதாக சான்றளித்துள்ளனர். தடுப்பூசி பூங்கா திறக்கப்பட்டால், அதில் பென்டாவேலண்ட் தடுப்பூசி, ஹெபடைடிஸ்&பி, ரேபிஸ், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட 7 வகையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும். இந்த வகை தடுப்பூசிகள் இந்தியாவில் மிகக்குறைந்த அளவிலேயே தயாரிக்கப்படுவதால், பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவில் இம்மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டால் மத்திய அரசுக்கு பெருமளவில் செலவு மிச்சமாகும்.

அதுமட்டுமின்றி, செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவில் உற்பத்தி செய்யப்படவுள்ள மருந்துகள் அனைத்தும் உலகத்தரம் வாய்ந்தவை என்பதால், அவற்றில் இந்தியாவின் தேவைக்குப் போக மீதமுள்ள தடுப்பூசி மருந்துகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். அவற்றை வாங்கிக் கொள்ள உலக நாடுகள் தயாராக உள்ளன. அதனால், செங்கல்பட்டு தடுப்பூசி பூங்கா தொடங்கப்பட்ட நாளில் இருந்தே லாபத்தில் இயங்கும். இது மத்திய அரசின் எந்த பொதுத்துறை நிறுவனத்திற்கும் கிடைக்காத அரிய வாய்ப்பாகும்.

தடுப்பூசி பூங்காவை அமைக்கும் எச்.எல்.எல் பயோடெக்கின் தாய் நிறுவனமான எச்.எல்.எல் லைஃப் கேரை பங்குவிற்பனை மூலம் தனியாருக்கு தாரை வார்க்க இருப்பது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். உண்மையில் இது பிரச்சினையே இல்லை. ஏனெனில் எச்.எல்.எல் லைஃப் கேர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி நடத்த கேரள மாநில அரசு முன்வந்துள்ளது. அத்தகைய சூழலில் எச்.எல்.எல் பயோடெக்கை தனி பொதுத்துறை நிறுவனமாக மாற்றி மத்திய அரசே நடத்தலாம். அதன்மூலம் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் 174 பேரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். ஒருவேளை இது மத்திய அரசால் சாத்தியமாகாத நிலையில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5% பங்குகளை வாங்கியது போன்று, அதிக லாபம் ஈட்டக்கூடிய தடுப்பூசி பூங்காவையும் தமிழக அரசு வாங்கி நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K