இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதா? தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்

0
68
Dr Ramadoss asks to Complete Plastic Ban in Tamilnadu
Dr Ramadoss asks to Complete Plastic Ban in Tamilnadu

இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதா? தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்

மக்கள் நலனுக்கு எதிராக உள்ளதாக கருதி இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற முயற்சிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட “இங்கிலாந்து சொல்லும் நில நடுக்க பாடம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக!” என்ற தலைப்பிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நீரியல் விரிசல் (Hydraulic Fracturing) தொழில்நுட்பத்தில் செயல்படுத்துவதால் நில நடுக்கம் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அத்தகைய திட்டங்களுக்கு இங்கிலாந்து அரசு தடை விதித்திருக்கிறது. நாட்டு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

நீரியல் விரிசல் முறையில் பூமிக்குள் உள்ள பாறைகளை விலக்கி பாறை எரிவாயு, மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் பொருட்களை எடுப்பதற்கு இங்கிலாந்து நாட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்து வந்தது. அதனால் அந்த நாட்டிலிருந்த பெரும்பான்மையான ஹைட்ரோகார்பன் கிணறுகள் மூடப்பட்டன. லங்காஷயர் பகுதியில் இருந்த ஒரே ஒரு ஹைட்ரோகார்பன் கிணறு மட்டும் செயல்பாட்டில் இருந்து வந்தது. அந்த கிணற்றில் நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாறை எரிவாயு எடுக்கப்படும் போது பூமிக்கு அடியில் ஏற்பட்ட உராய்வுகள் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2.5 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் இங்கிலாந்தின் பெட்ரோலிய நிறுவனமான எண்ணெய் மற்றும் எரிவாயு ஆணையம் ஆய்வு செய்தது. அதில், நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் அப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் நீரியல் விரிசல் முறைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அத்தொழில்நுட்பத்தால் ஆபத்து இல்லை என புதிதாக கண்டுபிடிக்கப்படும் வரை இத்தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இந்த தொழில்நுட்பத்திற்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்பாகவே பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்ட அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தான் மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ளன. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மட்டும் தான் அனுமதி அளித்துள்ளோம்; மீத்தேன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறி மத்திய அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில், இந்த இரண்டுக்கும் இடையே எந்த வித்தியாசமும் கிடையாது. மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்த புதிய கொள்கையின்படி ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக ஒரு உரிமம் மட்டும் பெற்றுக் கொண்டால் அதைக்கொண்டே அப்பகுதியில் கிடைக்கும் மீத்தேன், ஈத்தேன் உள்ளிட்ட அனைத்து வகை கரிமங்களையும் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைட்ரோ கார்பன் என்ற வரையறைக்குள் வரும் மீத்தேன், ஈத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களை நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தான் எடுக்க முடியும். அவ்வாறு செய்தால் தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களிலும், விழுப்புரம் மாவட்டத்திலும் நில நடுக்கம் ஏற்படுவதையும், காலப் போக்கில் இந்த பகுதிகள் பாலைவனமாக மாறுவதையும் தடுக்கவே முடியாது. நீரிசல் விரிசல் முறையின் ஆபத்தை ஆய்வுப்பூர்வமாகவும், அறிவியல் விதிகளின்படியும் அறிந்ததால் தான் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அதற்கு தடை விதித்திருக்கின்றன. இது தொடர்பான உண்மைகள் அனைத்தையும் அறிந்த பிறகும் இதை இந்தியா தடை செய்யாதது ஏன் எனத் தெரியவில்லை.

இந்தியாவுடன் ஒப்பிடும் போது இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகையும், மக்கள்தொகை அடர்த்தியும் மிகவும் குறைவு ஆகும். இந்தியாவுடன் ஒப்பிடும் போது ஐரோப்பிய நாடுகளில் கட்டிடங்கள் ஒழுங்குப்படுத்தப்பட்டிருக்கும். அதனால், நிலநடுக்கம் உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்பட்டால், அதன் சேதம் இந்தியாவை விட இங்கிலாந்தில் மிகவும் குறைவாகவே இருக்கும்.

மற்றொருபுறம், நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது நிலநடுக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கான வசதிகளும், தொழில்நுட்பமும் இந்தியாவை விட இங்கிலாந்தில் அதிகம். இத்தனை அம்சங்கள் சாதகமாக இருந்தும் கூட, நீரியல் விரிசல் முறைக்கு இங்கிலாந்து தடை விதிக்கிறது என்றால், அதற்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் கிடைக்கும் லட்சக்கணக்கான கோடிகளை விட, குடிமக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்று நினைப்பது தான் காரணம். ஆனால், இந்திய அரசோ மக்களின் உயிர்களையும், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் கருத்தில் கொள்ளாமல் பொருளாதாரப் பயன்களுக்கு மட்டும் முன்னுரிமை தருவது ஏன்? எனத் தெரியவில்லை.

மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையே மக்கள் நலனைக் காப்பது தான் என்பதால், நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தின் தீமைகளை உணர்ந்து கொண்டு, தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் அனுமதிக்கப் பட்டுள்ள அனைத்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் கைவிடுவதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்

author avatar
Ammasi Manickam