ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் புதிய கோரிக்கை

0
84
Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today
Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் புதிய கோரிக்கை

இலங்கையில் ஈழத்தமிழர்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள கோத்தபாயவுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்ற பிறகு அங்கு நடைபெற்று வரும் அரசியல் மாற்றங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. அத்துடன் புதிய அதிபரை வரும் 29 ஆம் தேதி இந்தியா வருமாறு மத்திய அரசு அழைத்திருப்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது.

இலங்கையில் சிங்கள இனவெறித் தீயை மூட்டி, அதன் உதவியுடன் வெற்றி பெற்று அதிபர் நாற்காலியில் அமர்ந்துள்ள கோத்தபாய ராஜபக்சே, ஈழத்தமிழர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஏதேனும் அறிவிப்புகளை வெளியிடுவார் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சமுதாயம் எதிர்பார்க்கிறது. ஆனால், அத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடாத கோத்தபாய, தமது அரசு நிர்வாகத்தில் மேற்கொண்டு வரும் நியமனங்கள் அனைத்தும் ஈழத்தமிழர்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன.

இலங்கை இறுதிப் போரின் போது அந்நாட்டு ராணுவத்தின் 53 ஆவது படையணியின் தலைவராக இருந்த கமல் குணரத்ன என்ற தளபதி, ஈழத்தமிழர்களை கொடூரமான முறையில் கும்பல், கும்பலாக படுகொலை செய்தார். இறுதிப் போரில் சரணடைந்த தமிழர்களைக் கூட கொடூரமாக கொலை செய்த குணரத்ன, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். அத்தகைய போர்க்குற்றவாளியைத் தான், ஏற்கனவே தாம் அனுபவித்து வந்த இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் பதவியில் கோத்தபாய அமர்த்தியிருக்கிறார். அதுமட்டுமின்றி, இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை விலக வைத்த கோத்தபாய, அந்தப் பதவியில் தமது சகோதரரும், இலங்கை இறுதிப்போரின் போது அதிபராக இருந்தவருமான மகிந்த ராஜபக்சேவை அமர்த்தியிருக்கிறார்.

இலங்கை அரசு நிர்வாகத்தில் அதிகாரம் பெற்ற நான்கு பதவிகள் அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை செயலாளர், போர்ப்படை தளபதி ஆகியவை தான். இவற்றில் முதல் 3 பதவிகளிலும் போர்க்குற்றவாளிகள் தான் அமர்த்தப்பட்டுள்ளனர். போர்ப்படை தளபதியாக இலங்கைப் போரில் முக்கியப் பங்காற்றிய தளபதி ஒருவரை அமர்த்த கோத்தபாய முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இலங்கையின் 4 முக்கியப் பதவிகளிலும் போர்க்குற்றவாளிகள் அமர்த்தப்படும் சூழலில், 2009 போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் ஏமாற்றமாகி விடுமோ என்ற ஐயம் எழுகிறது.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, ஐ.நா போர்க்குற்ற விசாரணை முடக்கப்படும் என்று கோத்தபாய ராஜபக்சே கூறி வந்தார். அவரது ஆட்சியில் போர்க்குற்றங்களுக்கு நீதி கிடைக்காது என்பது மட்டுமின்றி, இனி இலங்கையில் ஈழத்தமிழர்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியுமா? என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வதுடன், போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும் கடமையும் இந்திய அரசுக்கு உண்டு. தெற்காசியாவின் வல்லரசு என்பது மட்டுமின்றி, ஈழத்தமிழர்களின் தந்தை நாடு என்ற வகையிலும் இதை இந்தியா செய்ய வேண்டும் என்பது தான் உலகத்தமிழர்களின் எதிர்பார்ப்பு.

இத்தகைய சூழலில் தான் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சே முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு தான் வர வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்ததாகவும், அதை ஏற்று அவர் இம்மாதம் 29&ஆம் தேதி இந்தியா வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கோத்தபாயவை அவசரம், அவசரமாக தில்லிக்கு அழைத்து மத்திய அரசு பேச்சு நடத்துவதன் நோக்கத்தை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ராஜபக்சே சகோதரர்கள் சீனாவுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில், அவர்கள் சீனாவின் பக்கம் சாய்ந்து விடக்கூடாது; இந்தியாவை அனுசரித்து செல்ல வேண்டும் என்ற செய்தியை தெரிவிப்பது தான் அவரை அழைத்ததன் நோக்கம் என்பதை அறிய முடிகிறது. இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த கோணத்தில் இதன் முக்கியத்துவத்தை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்வார்கள்.

அதே நேரத்தில் இலங்கையை சீனாவிடமிருந்து ஈர்ப்பதற்கான விலையாக ஈழத்தமிழர்கள் நலனைக் காவு கொடுத்து விடக்கூடாது. ஒன்றரை லட்சம் தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த சிங்கள இனவெறி ஆட்சியாளர்களும், போர்ப்படை தளபதிகளும் தண்டனையின்றி தப்பிப்பதை இந்தியா அனுமதிக்கக் கூடாது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட தலைவர்களுடன் கோத்தபாய பேச்சு நடத்தும் போது, போர்க்குற்ற விசாரணை குறித்து ஐநா மனித உரிமை ஆணையத்திற்கு அளித்துள்ள அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்ற வேண்டும்; போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் அவர்களின் தண்டனை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்த வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஈழத்தமிழர்களுக்கு 18&ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படியும், அதற்கு கூடுதலாகவும் வழங்கப்பட வேண்டிய அரசியல் அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; வடகிழக்கு மாநிலங்களில் இருந்து படைகள் வெளியேற்றப்பட வேண்டும்; தமிழர்களிடமிருந்து வரவழைக்கப்பட்ட நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படியும் கோத்தபாய ராஜபக்சேவிடம் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்த வேண்டும் என்று அவர் அந்த அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

author avatar
Ammasi Manickam