இனியும் நடவடிக்கை எடுக்க தவறினால் அது மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் மத்திய மாநில அரசுகளுக்கு சுட்டி காட்டும் ராமதாஸ்

0
86

இனியும் நடவடிக்கை எடுக்க தவறினால் அது மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் மத்திய மாநில அரசுகளுக்கு சுட்டி காட்டும் ராமதாஸ்

பாமகவின் நெடுநாள் கோரிக்கையான மது விலக்கின் அவசியம் குறித்தும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய மாநில அரசுகளுக்கு சுட்டி காட்டியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

மது என்பது எவ்வளவு மோசமான அழிவு சக்தி என்பதற்கு ஏற்கனவே ஏராளமான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த உண்மைகளை அறிந்த பிறகும் மதுவை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகமாகவே அமையும்.

தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் ஓர் அங்கமான தேசிய போதை மீட்பு சிகிச்சை மையத்தின் சார்பில், ‘‘இந்தியாவில் மது அருந்துவதால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள்’’ என்ற தலைப்பில் தேசிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. மது அருந்துவதால் மனிதர்களுக்கு தோன்றும் புற்றுநோய், கல்லீரல் நோய் மற்றும் சாலை விபத்துகள் காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இந்த வகையில் மட்டும் 2011 முதல் 2050 வரையிலான 40 ஆண்டுகளில் 25.80 கோடி ஆண்டுகள் மனித வாழ்நாள் பறிக்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது இந்தியாவில் ஒருவரின் சராசரி வாழ்நாள் 60 ஆண்டுகள் என்று வைத்துக் கொண்டால், 64.50 லட்சம் பேர் 20 வயதுக்குள் உயிரிழக்கின்றனர். அதேபோல், மது அருந்துவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளின் பொருளாதார மதிப்பு மட்டும் ரூ.97.89 லட்சம் கோடி என்று எய்ம்ஸ் நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

மது ஒழிக்கப்பட வேண்டும்; மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மதுவுக்கு எதிராக 38 ஆண்டுகளாக நான் நடத்தி வரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன். மதுவிலக்கை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டாலும், அதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கு காரணம், அதன் மூலம் கிடைக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் மட்டும் தான். உண்மையில் மதுவால் கிடைக்கும் வருமானத்தை விட, மது பாதிப்புகள் அதிக இழப்பை ஏற்படுத்துகின்றன என்பது எய்ம்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மது விற்பனையால் அரசுக்கு வரி வருமானம் கிடைப்பது ஒருபுறமிருக்க அதையும் தாண்டி, ஆண்டுக்கு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.45% பொருளாதார இழப்பு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. தேசிய அளவில் மதுவால் கிடைக்கும் வருமானத்தைத் தாண்டி ஆண்டுக்கு ரூ.2.64 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.31,500 கோடி மது விற்பனை மூலம் வருமானம் கிடைத்தாலும், அதையும் தாண்டி ஆண்டுக்கு ரூ.24.94 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பு மதிப்புகள் அனைத்தும் பாட்டாளி மக்கள் கட்சியால் ஏற்கனவே கூறப்பட்டவை தான். இப்போது எய்ம்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த தகவல்கள் மறுஉறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும், மீண்டும் கூற விரும்புவது ஒரு விஷயத்தை தான். மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் மகிழ்ச்சியடையக்கூடிய ஒன்றல்ல; அது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு இணையான செயல் என்பது தான் அது. ஒரு மாநிலத்தின் உண்மையான சொத்து என்பது வலிமையான, திறமையான மனிதவளம் தான். ஆனால், விலைமதிப்பற்ற மனித வளத்தை மது சீரழிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டிய இளைஞர் சமுதாயம் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறது. இதனால் வளர்ச்சிக்குத் தேவையான மனித வளம் கிடைக்காமல் அனைத்து துறைகளும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் பார்க்காமல் மதுவிற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிப்பதை மட்டும் கண்டு மகிழ்வது சரியல்ல.

அதேநேரத்தில் மதுவை ஒழிப்பதன் மூலம் மனித வாழ்நாள் 55.20 கோடி ஆண்டுகள் அதிகரிக்கக்கூடும். அதுமட்டுமின்றி, மனித உழைப்பு அதிகரிக்கும் என்பதால் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு பெருமளவில் அதிகரிக்கும். இதனால், இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். நாட்டில் வறுமையையும், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவும் இது உதவும். மதுவால் மோசமான தீமைகள் ஏற்படும்; மதுவிலக்கால் நன்மைகள் ஏற்படும் எனும் நிலையில், இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தெடுப்பது தான் நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதாக அமையும். எனவே, தேசிய அளவில் மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும். இது குறித்து விவாதித்து. நல்ல முடிவை எடுத்து இந்தியாவை உலகின் மது இல்லாத முதல் நாடாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K