சென்னை மக்களை அச்சுறுத்தும் பிரச்சனையில் தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வழங்கிய ஆலோசனை

0
60
PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil
PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

சென்னை மக்களை அச்சுறுத்தும் பிரச்சனையில் தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வழங்கிய ஆலோசனை

நள்ளிரவு நேரங்களில் சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் இரு சக்கர வாகன பந்தயங்களின் எண்ணிக்கை வாரத்துக்கு வாரம் அதிகரித்து வருகிறது. இதனால் அவ்வப்போது உயிரிழப்புகளும் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது. இதை தடுக்க தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று “மக்களை மிரட்டும் பைக் பந்தயங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் நடைபெறும் இரு சக்கர வாகன பந்தயங்களின் எண்ணிக்கை வாரத்துக்கு வாரம் அதிகரித்து வருகிறது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்தும் பந்தயங்களைக் கட்டுப்படுத்த முடியாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, கடற்கரை காமராஜர் சாலை, பெசன்ட் நகர் கடற்கரை சாலை, பெரம்பூர் பாலம் மற்றும் அவற்றை இணைக்கும் சாலைகள் ஆகியவை தான் இரு சக்கர ஊர்தி பந்தயத்திற்கான தலைநகரங்களாக திகழ்கின்றன. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகள் அமைந்துள்ள பசுமைவழிச்சாலை, இராயப்பேட்டை, அண்ணா சாலை, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலைகள் ஆகியவற்றிலும் இந்த பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.

நள்ளிரவில் இந்த சாலைகளில் கூடும் இளைஞர்கள், சாலைகளைப் பொறுத்து நீண்ட தொலைவு மற்றும் குறுகிய தொலைவு பந்தயங்களை நடத்துகின்றனர். 650 சி.சி. திறன் கொண்ட, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிவிரைவு இருசக்கர ஊர்திகளுடன் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பறக்கின்றனர். நள்ளிரவில் சாலைகளில் வேறு எவரும் பயணிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் இவர்கள் இந்த வேகத்தில் செல்கின்றனர்.

அப்போது எதிர்பாராத வகையில் சாலையில் எவரேனும் குறுக்கே வந்து விட்டால், யார் நினைத்தாலும் விபத்துகளை தடுக்க முடியாது. மாதத்திற்கு குறைந்தது ஓரிரு விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த பந்தயங்களில் ஈடுபடுவோரில் பலரும் அரசியல், பொருளாதார செல்வாக்கு மிகுந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இதுகுறித்த செய்திகள் பெரிதாக வெளியில் வருவதில்லை.

ஒவ்வொரு பந்தயத்துக்கும் லட்சக்கணக்கில் பரிசுத்தொகை நிர்ணயிக்கப்படுகிறது. பந்தயங்களில் பங்கேற்பவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் போதுமான பாதுகாப்பு கருவிகளை அணிவதில்லை. இதனால், கண்மூடித்தனமான வேகத்தில் செல்லும் போது விபத்து ஏற்படுவதும், அவற்றில் உயிரிழப்புகள் நிகழ்வதும் வாரந்தோறும் நடக்கும் வாடிக்கையாகி விட்டன. பந்தயங்களில் பங்கேற்பவர்கள் மட்டுமின்றி, பந்தயம் நடக்கும் சாலைகளை கடக்க முயல்பவர்கள், சாலைகளில் பயணிப்பவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த பைத்தியக்காரத்தனமான பந்தயத்தில் பலியாகின்றனர்.

இரு சக்கர ஊர்தி பந்தயங்களைத் தடுக்க சென்னை பெருநகரக் காவல்துறை, அதனால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகிறது. ஆனால், சட்டத்தில் உள்ள ஓட்டைகளும், சட்டத்தை வளைக்கும் அளவுக்கு பந்தயக்காரர்களுக்கு உள்ள செல்வாக்கும் இதற்கு பெருந்தடையாக உள்ளது.

கடந்த சில வாரங்களில் மட்டும் பந்தயத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை சுற்றி வளைத்து பிடித்து, கடுமையாக எச்சரித்து அனுப்பியது. அவர்களில் பலரது இருசக்கர ஊர்திகளை காவல்துறை பறிமுதல் செய்தது. ஆனாலும், அதைப்பற்றிக் கவலைப்படாத அவர்கள் புதிய இரு சக்கர ஊர்திகளை வாங்கி, வழக்கம் போல வார இறுதி நாட்களின் நள்ளிரவுகளில் பந்தயம் நடத்தி வருகின்றனர்.

சென்னை மாநகரத்தின் தீராத வியாதியாக உருவெடுத்துள்ள இருசக்கர ஊர்தி பந்தயத்தை முற்றிலுமாக தடுப்பது சாத்தியமே இல்லாத செயல் அல்ல. மத்திய, மாநில அரசுகளின் ஆதரவுடன் காவல்துறை மூன்று அம்சத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் இந்த சமூகத் தீமைக்கு முடிவு கட்ட முடியும்.

1. இரு சக்கர ஊர்தி பந்தயங்களில் பங்கேற்போர் மீது அதிகபட்சமாக அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதாகத் தான் வழக்கு பதிவு செய்ய முடியும். இந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ரூ.1000 வரை அபராதமும், 6 மாதம் வரை சிறை தண்டனையும் மட்டுமே விதிக்க முடியும். இதனால், சம்பந்தப்பட்டவர்கள் ரூ.1000 அபராதம் செலுத்தி விட்டு, தப்பி விடுகின்றனர்.

இந்த நிலையை மாற்றி இரு சக்கர ஊர்தி பந்தயங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க தனிச்சட்டப் பிரிவு கொண்டு வருவதுடன், அதற்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்திலும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளிலும் தேவையான திருத்தங்களை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

2. பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் 650 சி.சி. இரு சக்கர ஊர்திகள் மிகவும் ஆபத்தானவை. அதை இயக்குவதற்கு ஏற்ற சாலைகள் நமது நாட்டில் இல்லை. எனவே, 650 சி.சி மற்றும் அதற்கு கூடுதலான திறன் கொண்ட இரு சக்கர ஊர்திகளை, தொழில்முறை பந்தய பயன்பாட்டை த் தவிர, பிற பயன்பாடுகளுக்கு தடை செய்ய வேண்டும்.

3. இரு சக்கர ஊர்தி பந்தயங்களில் ஈடுபடுவோரின் பெற்றோரை அழைத்து, அவர்களது பிள்ளைகளின் செயல்கள், அதிலுள்ள ஆபத்துகள் போன்றவற்றை எடுத்துக் கூறி, பிள்ளைகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்ளும்படி அறிவுரை வழங்குதல்; இரு சக்கர ஊர்தி பந்தயங்களில் ஈடுபடுவோரை, அதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பொது இடங்களில் தினமும் சில மணி நேரங்கள் என ஒரு வாரத்திற்கு பிடித்துக் கொண்டு நிற்பது போன்ற நடத்தைத் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றை காவல்துறை செயல்படுத்த வேண்டும்.

மேற்குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளை அரசும், காவல்துறையும் மேற்கொள்வதன் மூலமாகவும், இரு சக்கர ஊர்தி பந்தயங்களின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை ‘ஆபத்தான பந்தயம்’ இல்லாத பாதுகாப்பு பகுதிகளாக மாற்ற வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Ammasi Manickam