குவைத் முகாமில் தங்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

0
65
Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today
Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

குவைத் முகாமில் போதிய உணவு கூட இல்லாமல் தங்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் என மத்திய அரசிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

குவைத் பொதுமன்னிப்பு முகாமில் உணவு வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீது அந்நாட்டு காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். மற்றொருபுறம் நோய்ப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், குவைத்தில் சிக்கியுள்ள தமிழர்களை தாயகம் அழைத்து வர இந்திய வெளியுறவுத்துறை இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

குவைத் நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அங்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, தாயகத்திற்கு அனுப்பத் தயாராக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குவைத் நாட்டின் மாங்காஃப் (Mangarf) என்ற இடத்தில் உள்ள ஆண்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் பலருக்கு நேற்றிரவு உணவு வழங்கப்படவில்லை. இதை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற சிலர், தங்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழர்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும், இதில் ஆந்திரத்தை சேர்ந்த ஒருவருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் உணவு கிடைக்கவில்லை என்று புகார் கூறியவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, முட்டி போட வைத்து, அவமானப்படுத்தப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மற்றொருபுறம், அரிதியா என்ற இடத்தில் உள்ள மகளிருக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தங்களை உடனடியாக சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும், அதற்கான உத்தரவாதம் கிடைக்கும் வரை உணவு அருந்த மாட்டோம் என்றும் கூறி கடந்த 3 நாட்களாக உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர். அம்முகாமில் இருந்த ஒரு பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு முகாம்களில் பெரும் அச்சமும், பதற்றமும் நிலவி வருகிறது.

குவைத்தில் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட இந்திய தொழிலாளர்களில் 7340 பேர் முகாம்களிலும், சுமார் 5,000 பேர் முகாம்களுக்கு வெளியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் ஏப்ரல் மாதத் தொடக்கத்திலிருந்து 50 நாட்களுக்கும் மேலாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மே மாதம் 7-ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்கான விமான சேவைகள் இயக்கப்படும் நிலையில், குவைத்தில் உள்ள இந்தியர்களில் சுமார் 4,000 பேர் இதுவரை தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் கடந்த 10-ஆம் தேதி குவைத்திலிருந்து சென்னைக்கு இயக்கப் பட்ட விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 186 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். அதன்பின் கடந்த 16 நாட்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட, சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படவில்லை.

குவைத் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள கேரளத் தொழிலாளர்களும், ஆந்திரத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் அதிக எண்ணிக்கையில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தங்களை அழைத்துச் செல்ல விமானம் இயக்கப்படாததால் தமிழர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மே 16-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரையிலான இரண்டாம் கட்ட வந்தே பாரத் இயக்கத்தின்படி, குவைத் உள்ளிட்ட எந்த நாட்டிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு விமானங்கள் இயக்கப்படவில்லை. மே 23-ஆம் தேதிக்கு பிறகாவது குவைத்திலிருந்து தமிழகத்திற்கு விமானங்கள் இயக்கப்படும்; அவற்றில் தாயகம் திரும்பலாம் என்றும் தமிழர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஜூன் மாத இறுதி வரை விமானங்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருப்பது குவைத்தில் தவிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்களிடையே நிலவும் ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் அதிகப்படுத்தியிருக்கிறது.

தாயகம் திரும்ப முடியாமல் 50 நாட்களுக்கும் மேலாக தவிப்பதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக தமிழர்களை மீட்க விமானங்கள் இயக்கப்படாவிட்டால், மன உளைச்சல் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக்கூடும். மற்றொருபுறம் குவைத் நாட்டில் இன்று வரை 21,967 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப் படுகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படுவோரில் பெரும்பான்மையினர் இந்தியாவைச் சேர்ந்தவர்களாவர். பொதுமன்னிப்பு முகாம்களில் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதிய அளவில் இல்லாததால் அங்கு எளிதாக கொரோனா வைரஸ் பரவக் கூடும் என்ற அச்சமும் தமிழகத்தினரிடையே நிலவி வருகிறது.

குவைத்தில் பொதுமன்னிப்பு முகாம்களில் சுமார் 450 பேர், வெளியில் 250 பேர் என தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 700 பேர் மட்டுமே உள்ளனர். அதிகபட்சமாக இரு விமானங்கள் மூலம் அவர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து விட முடியும். எனவே, இனியும் தாமதிக்காமல், சிறப்பு விமானங்களை இயக்கி குவைத்தில் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

author avatar
Ammasi Manickam