OBC இட ஒதுக்கீடு 3 மாதங்களில் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

0
105

OBC இட ஒதுக்கீடு 3 மாதங்களில் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்.

OBC இட ஒதிக்கீடு தொடர்பாக பாமக,அதிமுக,திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் அகில இந்திய ஒதுக்கீட்டில் OBC க்கு 50% இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம், சட்டரீதியாக எந்தவொரு தடைகளும் இல்லை

உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை ஏற்க முடியாது மேலும் OBC இடஒதுக்கீடு தொடர்பாக 3 மாதத்தில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்தி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் விடுத்துள்ள அறிக்கையில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை; இட ஒதுக்கீட்டின் அளவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது சமூகநீதிக்கான பா.ம.க.வின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தும் போது, அதில் பிற பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. அதை எதிர்த்தும், அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தான் முதன்முதலில் வழக்குத் தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் மற்ற கட்சிகள் 50% இட ஒதுக்கீடு கோரி வழக்கு தொடர்ந்த நிலையில், அனைத்து தரப்பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு,‘‘ மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை. இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. மத்திய அரசே இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்கலாம்’’ என்று ஆணையிட்டிருக்கிறது.

இட ஒதுக்கீட்டின் அளவு எவ்வளவு என்பதை தீர்மானிக்க மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை மூன்று மாதங்களுக்குள் அமைத்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். நடப்பாண்டில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஆணையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பெறுவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு அகில இந்திய தொகுப்பு இடங்களில் இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் போராட்டங்களையும் சட்டப் போராட்டங்களையும் நடத்தி வருகிறது. அப்போராட்டங்களுக்கு கிடைத்த பயன் தான் இந்த தீர்ப்பு ஆகும்.

2006-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு சட்டத்தின்படியே அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான இட ஒதுக்கீட்டை தீர்மானிக்க முடியும். அதன்படி பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க முடியும். சட்டரீதியிலான இந்த உண்மை பாட்டாளி மக்கள் கட்சிக்கு நன்றாகத் தெரியும் என்பதால் தான் அந்தக் கோரிக்கையுடன் முதலில் உச்சநீதிமன்றத்தையும், பின்னர் உயர்நீதிமன்றத்தையும் அணுகியது. தமிழக அரசும், பிறகட்சிகளும் இதே நிலைப்பாட்டை எடுத்திருந்தால், ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி உடனடியாக 27% இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அந்த இட ஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதலே நடைமுறைக்கு வந்திருக்கும். ஆனால், இப்போது தமிழக அரசும், பிற கட்சிகளும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்ததால் இட ஒதுக்கீடு கிடைப்பது குறைந்தது 3 மாதங்களாவது தாமதம் ஆகும். அவ்வாறின்றி உடனடியாக இட ஒதுக்கீடு கிடைத்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, மத்திய அரசு 3 மாதம் வரை காத்திருக்காமல் உடனடியாக தமிழக அரசுடன் கலந்து பேசி குழுவை அமைக்க வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் விரைந்து மேற்கொண்டு மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை பிறப்பிக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு என்ற தவறான அணுகுமுறையை மேற்கொள்ளக் கூடாது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Parthipan K