அதிமுக தலைமையகத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைப்பு!!

0
104
#image_title

அதிமுக தலைமையகத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைப்பு!

சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கையெழுத்திட்டு அதிமுக ஆவணங்களை பெற்றுக்கொண்டார்.

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து , அலுவலகத்தினுள் நுழைந்து ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்ற ஆவணங்கள் சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்தோஷ் முன்னிலையில் சிபிசிஐடி காவலர்கள் மூலம் அதிமுகவினரிடம் ஒப்படைக்கப்பட்டன .

அதிமுக அமைப்புச் செயலாளர் , முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவணங்கள் மற்றும் பொருள்களை கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார் .

நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட அனைத்து ஆவணங்களையும் , அதிமுக வழக்கறிஞர் அணியினர் டவேரா கார் மூலம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி;

ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களால் அதிமுக தலைமை அலுவலகத்தின் ஆவணம் , கணினிகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. ஆவணங்கள் களவாடப்பட்ட வழக்கில் முதல் திருட்டுக் குற்றவாளியாக ஓ.பன்னீர் செல்வம் சேர்க்கப்பட்டிருந்தார்.

அந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் , அதன் பிறகு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்தது. பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது எங்களிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் வீட்டில் இருந்து காவல்துறையால் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இன்று ஒப்படைக்கப்பட்ட பொருள்களில் ரொக்கப்பணம் ஏதும் இல்லை , ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் பணம் ஏதும் எடுத்து சென்றனரா என்பது வழக்கு விசாரணையில் தெரியவரும்.

ஓ. பன்னீர் செல்வத்திற்கு நகர்மன்றத் தலைவர் , சட்டமன்ற உறுப்பினர் , அமைச்சர் , முதலமைச்சர் , கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என பல பதவிகளை கொடுத்து அழகுபார்த்த கட்சி அதிமுக. அதிமுக தலைமை அலுவலகம் கோயில் போன்றது , அதன் கதவுகளை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் உடைத்தனர் , ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் செருப்பை வைத்து சென்றிருந்தார் ஓ.பன்னீர்செல்வம் .

அதனால்தான் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அந்த துரோகிகள் குறித்து எங்கள் பகுதியில் சொல்வதைப் போல் மூஞ்சியில் பீச்சாங் கைய வைக்க வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்ற நிலையில் , ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே சென்று கட்சியின் சொத்து ஆவணங்கள் , அலுவலக கணினிகள் , கட்சி வாகனங்களின் பதிவு சான்றிதழ் , 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்க பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Savitha