அறுபதாம் கல்யாணம் ஏன் செய்ய வேண்டும்… தெரியுமா உங்களுக்கு?

0
199

அறுபதாம் கல்யாணம் ஏன் செய்ய வேண்டும்… தெரியுமா உங்களுக்கு?

 

நம் வீட்டில் ஒரு கல்யாணம் என்பது நம் இல்லத்தில் இருப்பவர்கள் மட்டும் இல்லாமல் நம் உறவினர்கள் நண்பர்கள் என்று அனைவரும் ஒன்றுகூடி நிகழும் ஓர் அற்புத நிகழ்ச்சியாகும். ஆனால் அதிலிருந்து இன்னும் மேம்பட்டவிதமாக, தங்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோருக்கு பிள்ளைகளெல்லாம் சேர்ந்து திருமணம் செய்து வைத்து மகிழும் ஓர் அற்புத நிகழ்வே அறுபதாம் கல்யாணம்.

 

 

குடும்ப தலைவருக்கு 60 வயது அல்லது 60 ஆண்டுகள் மற்றும் தமிழ் வருட சுழற்சியை கடந்து 61ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது ஒரு வரமாக கருதுகின்றனர். இதனாலேயே 61ஆம் வயதில் அந்த ஆண் சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்ளும் சம்பிரதாயம் போற்றப்படுகிறது.

வயதான தங்கள் பெற்றோர்களின் திருமணத்தை அவர்களின் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் தற்போது காணும் பாக்கியத்தையும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் மற்றும் அவர்களின் சுற்றமும், நட்பும் வயதில் மூத்த தம்பதிகளின் ஆசிகளை பெற்று நலம் பெறவும் இந்த சஷ்டியப்த பூர்த்தி சடங்கை செய்கின்றனர்.

 

 

 

சஷ்டியப்த பூர்த்தி சடங்கு செய்வதற்கு அனுபவம் வாய்ந்த வேதியரிடம் நல்ல நாள் நேரம் ஆகியவற்றை குறித்து கொள்வது முறையான தொடக்கம் ஆகும். இச்சடங்கை கோயிலிலோ திருமண மண்டபங்களிலோ அல்லது வீட்டிலோ செய்து கொள்ளலாம். பிறகு அந்த தம்பதிகளின் பிள்ளைகள் உறவினர்களையும் நண்பர்களையும் முறைப்படி சென்று தங்கள் பெற்றோரின் சஷ்டியப்த பூர்த்தி விழாவிற்கு அழைக்க வேண்டும்.

வேதியரின் அறிவுறுத்தலின் படி குலதெய்வ பூஜை செய்த பின்பு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ஆயுஷ் ஹோமம், அமிர்த ம்ருத்யுஞ்ஜய ஹோமம், தன்வந்திரி ஹோமம் முதலிய ஹோமங்கள் செய்யப்பட்டு, கலச பூஜை செய்யப்படும். பிறகு முகூர்த்த நேரத்தில் குடும்பத்தின் 61 வயதை தொடும் ஆண்மகனான மணமகன் புது தாலியை தனது மனைவியின் கழுத்தில் கட்டி சஷ்டியப்த பூர்த்தி சடங்கை நிறைவு செய்வார்.

 

பூஜை முடிந்ததும், கலசங்களில் பூஜிக்கப்பட்டு இருக்கும் புனித நீரானது அவர்களின் பிள்ளைகளால், உறவினர்களால், நண்பர்களால் மணமக்களின் மீது ஊற்றப்படுகிறது. மணமக்களின் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்க வேண்டும். உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அல்லாமல், ஆலயத்தில் இறைவனை தரிசிக்க வருவோர் அனைவருமே மணமக்களின் மீது கலச நீரை ஊற்றி, ஆசீர்வாதம் பெறலாம்.

இத்திருமண நிகழ்வை காண்பது என்பது சொர்க்கத்தை காண்பது போன்றது என்பதாலேயே பலரும் இத்திருமண விழாவில் தவறாமல் கலந்து கொள்வார்கள்.

 

 

 

 

author avatar
Parthipan K