இனி என்னை இப்படித்தான் அழைக்க வேண்டும்! திமுக நிர்வாகிகளுக்கு அன்பு கட்டளையிட்ட உதயநிதி ஸ்டாலின்!

0
58

புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் இருக்கின்ற தடிகொண்ட அய்யனார் திடலில் புதுக்கோட்டை வடக்கு தெற்கு மாவட்ட திமுகவின் சார்பாக தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் 99வது பிறந்த நாள் விழா, திமுகவின் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், நூற்றாண்டு விழா, தொண்டர்களை போற்றுவோம் பொற்கிழி வழங்கும் விழாவில், திமுகவின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டசபை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திமுகவின் முன்னோடி தொண்டர்கள் 1051 பேருக்கு தலா 10,000 விதம் ரூபாய் 5,10,10,000 பொற்கிழி வழங்கினார்.

அதன் பிறகு இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது நோய்த்தொற்று தடுப்பூசி எல்லோரும் செலுத்திக்கொண்டீர்களா? என்று கேள்வி எழுப்பி பேச்சை ஆரம்பித்தார். பேசுவதைவிட செயல்பட்டால்தான் எனக்கு பிடிக்கும் எந்த மாவட்டத்திற்கு, எந்த நிகழ்ச்சிக்கு, சென்றாலும் கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு உதவி செய்யும் நிகழ்ச்சிக்கு அந்தந்த மாவட்ட செயலாளரிடம் தெரிவித்து ஏற்பாடு செய்யச் சொல்லி அந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்று கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

சென்ற 3 தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் இதற்கு திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் தான் காரணம். நான் பெரியாரையும், அண்ணாவையும், நேரில் பார்த்ததில்லை. கலைஞர் கருணாநிதியை பார்த்து வளர்ந்திருக்கிறேன், தற்போது திமுக தொண்டர்களை பெரியார், அண்ணா, கலைஞர், அவர்களின் மறு உருவமாக நான் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

என் மீது கொண்ட அன்பு காரணமாக திமுகவைச் சேர்ந்தவர்கள் என்னை மூன்றாம் கலைஞர் என தெரிவிக்கிறார்கள். இளம் தலைவர் என்றெல்லாம் அழைக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் அது வேண்டுகோள் மட்டுமல்ல உரிமையாகவே தெரிவிக்கிறேன். மூன்றாவது கலைஞர், இளம் தலைவர், என்று அழைப்பதில் எனக்கு துளிகூட உடன்பாடு கிடையாது. கலைஞர் என்றால் அது கலைஞர் மட்டும்தான்.

ஆகவே என்னை அவ்வாறு அழைக்க வேண்டாம், சிலர் சின்னவர் என்று அழைக்கிறார்கள் அப்படி அழைப்பது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது ஏனென்றால் என்னை விட அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பலர் இருப்பதால் நான் சின்னவர் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

தற்சமயம் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தவர்கள் அனைவரும் மிகப் பெரிய பதவிக்கு சென்றிருக்கிறார்கள். அந்தளவிற்கு அவர்களுக்கு ராசி இருக்கிறது என மேடையில் பேசியவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் எனக்கு ராசியில் நம்பிக்கை நம்பிக்கையில்லை உழைப்பினாலும் உங்கள் அன்பினாலும் அது சாத்தியமாகும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

மாவட்டம் தோறும் திராவிட மாடல் பயிற்சிப் பட்டறை நடத்தி வருகிறோம், இதனை நாள்தோறும் தினசரி நாளிதழில் விமர்சனம் செய்திருக்கிறது. அதனை என்னிடம் சிலர் தெரிவிக்கிறார்கள் அதற்கு நான் அந்த நாளிதழில் விமர்சனம் செய்தால் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தேன் என கூறியிருக்கிறார்.

திமுகவின் தொண்டர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி 4 மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்படும், அதற்கு நான் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தினால் மாதம் ஒருமுறை கூட நான் மகிழ்ச்சியுடன் வருவேன் என கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இளைஞரணிக்கு நிதியாக 3 வருடங்களில் 10 கோடி ரூபாய் சேர்ந்திருக்கிறது. அதனை வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறோம். அதில் வரும் வட்டியை திமுக தொண்டர்களின் மருத்துவம், கல்வி, உள்ளிட்ட தேவைகளுக்கு வழங்குவோம் என கூறியிருக்கிறார்.