உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த புதிய மனு!

0
112

தேர்தல் என்று வந்து விட்டாலே கொள்கை கொள்கை ரீதியில் வளர்ச்சித் திட்டங்களிருக்கும் என்று தற்போது எந்த கட்சியுமே அறிவிப்பதில்லை. எதற்கெடுத்தாலும் இலவசம் இலவசம் என்று இலவச அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பதே தற்போதைய கட்சிகளின் நிலையாக இருந்து வருகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் என்று வந்துவிட்டால் எப்போதுமே கவர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு விட்டால் போதும், அடுத்த ஆட்சி நம்முடையதுதான் என்ற மனநிலை அனைத்து அரசியல் கட்சிகளின் மனதிலும், எழுந்திருக்கிறது.

இந்த நிலையில், அரசியல் கட்சிகளின் இலவசங்களுக்கு எதிராகவும், இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்யக் கோரியும், உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞரும், பாஜகவின் நிர்வாகியுமான, அஸ்வினி குமார் உபாத்யாயா ஒரு வழக்கை தொடர்ந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த 11ஆம் தேதி தலைமை நீதிபதி என்.வி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.

அந்த சமயத்தில் இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த நிதி ஆயோக், மத்திய நிதி ஆணையம், சட்ட ஆணையம், ரிசர்வ் வங்கி, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அடங்கிய நிபுணர் குழுவை அமைப்பது தொடர்பான யோசனைகளை தெரிவிக்க மனுதாரர் மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும், மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் அவர்களுக்கும், உத்தரவிட்டு விசாரணையை வருகின்ற 17ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், 17ஆம் தேதியான இன்று இதனை எதிர்த்து திமுக வின் சார்பாக இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் சமூக நீதியை நிலை நாட்டுவதற்காகவே மக்கள் நலத் திட்டங்களில் இலவச சேவைகள் இடம்பெறுகின்றன. அரசியலமைப்பின் 38வது பிரிவின் படி பொருளாதார சமத்துவத்தை நிலை நாட்டுவதே இலவச திட்டங்களின் நோக்கம். ஆகவே இலவசங்கள் குறித்த வழக்கில் தங்களை இணைக்க வேண்டுமென்று தெரிவித்து திமுக இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.

அதோடு செல்வாக்கு மிக்க தொழிலதிபர்கள் செலுத்தாத வங்கி கடன்களையும், மத்திய அரசு தள்ளுபடி செய்து வருகிறது எனவும், மத்திய அரசு வெளிநாட்டு கம்பெனிகளுக்கு வரிச்சலுகைகள் வழங்குகிறது எனவும், மனுவில் திமுக சுட்டிக்காட்டிள்ளது.