நாடாளுமன்றத்தில் கன்னி உரையிலேயே கலக்கிய திமுகவின் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்

0
206
DMK MP Thamizhachi Thangapandian First Speech in Parliament-News4 Tamil Online Tamil News Channel
DMK MP Thamizhachi Thangapandian First Speech in Parliament-News4 Tamil Online Tamil News Channel

நாடாளுமன்றத்தில் கன்னி உரையிலேயே கலக்கிய திமுகவின் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்

சென்னை தெற்கு தொகுதியின் தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் தனது முதல் உரையை ஜூலை 18 ஆம் தேதி பிற்பகல் ஆற்றினார். அவை மரபுகளை மீறி உறுப்பினரின் முதல் உரையின் போது ஆளுங்கட்சியினரான பாஜகவினர் சில சமயம் குறுக்கீடுகள் செய்தனர். சபாநாயகர்தான், ‘இது அவர் முதலில் ஆற்றும் உரை, குறுக்கிடாதீர்கள்’ என்று தலையிட்டு தமிழச்சி தங்கபாண்டியனை மேலும் பேசச் சொல்லியுள்ளார். தமிழச்சி தங்கபாண்டியனின் முதல் உரையில் பேசியதாவது.

கணியன் முதல் ஸ்டாலின் வரையிலான புகழ்ச்சி

சென்னை தெற்கு தொகுதியிலிருந்து முதன்முறை நாடாளுமன்ற உறுப்பினராக வந்திருக்கிறேன். அனைத்து புவியியல் எல்லைகளையும் கடந்து, ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று கூறும், இந்த உலகம் முழுவதும் எனது வீடே, அனைத்து மனிதர்களும் எனது உறவினர்களே என்ற கருத்தை 2000 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த, கணியன் பூங்குன்றனார் என்ற புலவர் பிறந்த தமிழ்நாட்டு மண்ணிலிருந்து நான் வந்திருக்கிறேன். ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று அறிவித்து சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை வலியுறுத்தியும், கட்டுப்பாடு மிகுந்த வர்ணாஸ்ரம தர்மத்தை மறுத்தும் அனைத்து உயிர்களும் பிறப்பினால் சமமானவையே என்ற கொள்கையை அறிவித்த பெரும் புலவர் திருவள்ளுவர் பிறந்த மண்ணிலிருந்து நான் வந்திருக்கிறேன்.

தந்தை பெரியார் தொடங்கி வைத்த திராவிடர் சீர்திருத்த இயக்கமும், தமிழ் பண்பாட்டு மறுமலர்ச்சியும் பூத்த தமிழ்நாட்டு மண்ணில் திராவிட நாட்டு டெமாஸ்தனீஸ் என்று புகழ் பெற்றவரும், தி.மு.க. தோற்றுநருமான பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞரும் புகழ் பெற்ற இலக்கியச் செம்மலும், அரசியல் ராஜதந்திரியுமான டாக்டர் கலைஞர், பிறந்த திராவிட மண்ணிலிருந்து வந்தவள் நான் என்று கூறிக் கொள்வதிலும் அதே அளவில் நான் பெருமைப்படுகிறேன். எனது அரசியல் பயணத்தைத் துவக்கி வைத்த முத்தமிழ் அறிஞருக்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்!

இங்கு நிற்கையில், எனது தந்தை காலம் சென்ற வே.தங்கபாண்டியன் அவர்களை நெகிழ்வுடனும், மகிழ்வுடனும் நினைவு கூரும் நான், நம் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலும், வழிகாட்டுதலிலும், அரசியல் ராஜதந்திரத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கும், மதசார்பின்மைக்கும் சட்ட ரீதியான, உறுதியான ஆதரவை அளித்துள்ளனர் என்பதற்காக அவருக்கு எனது உளமார்ந்த நன்றியைப் பதிவு செய்வதற்கு விரும்புகிறேன்.

தென் சென்னை மக்களுக்கு நன்றி

தான் இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்திற்கு முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் என்று தனது கன்னிப் பேச்சில் தாதாபாய் நவ்ரோஜி அவர்கள் குறிப்பிட்டது இங்கே எனக்கு நினைவுக்கு வருகிறது. அதற்காக இங்கிலாந்து நாட்டு மக்களுக்கு இந்தியாவின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார். அவ்வாறே, மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளுக்கு ஆதரவாக தேர்தலில் ஒரு மாபெரும் வெற்றியை எங்களுக்கு அளித்தமைக்காகத் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மக்களவையில் துடிப்பு மிக்க 78 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். சென்னை தெற்கு தொகுதியிலிருந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பெண் உறுப்பினர் என்ற உண்மையை அடக்கத்துடன் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பேரறிஞர் அண்ணா, திராவிட இயக்கக் கோட்பாட்டாளர் திரு. முரசொலி மாறன், நமது முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆர்.வெங்கட்ராமன், தற்போதுள்ள தி.மு.க. நாடாளுமன்றக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. டி.ஆர்.பாலு போன்ற புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள் இந்தத் தொகுதியின் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர். எனது தொகுதி மக்களுக்கும் நன்றி கூறிக் கொள்ளும் நான், மிகச் சிறந்த சேவையை அளிப்பேன் என்று அவர்களுக்கு உறுதி கூறிக்கொள்கிறேன்.

கனவுகளைப் பரிசளிக்கும் கானல்

முதலில் தனது வரவு – செலவு நிதி நிலை அறிக்கையை முதன் முதலாக சமர்ப்பித்ததற்காக முதல் முழுநேர பெண் நிதி அமைச்சரான திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். எங்கள் மண்ணின் மகளான ஒரு தமிழச்சி என்பதற்காக அவரைப் பாராட்டுவதில் நான் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.

மேதகு குடியரசுத் தலைவர் உரை, மாண்புமிகு பாரத பிரதமரின் உரை, மாண்புமிகு மத்திய நிதி அமைச்சரின் வரவு – செலவு திட்ட நிதி நிலை அறிக்கை அனைத்தும் ஒரு கானல் நீர் தோற்றமே – கனவுகளைப் பரிசளிக்கும் மாயக்கானல் நீர் தோற்றமே. 2024-25 ஆம் ஆண்டில் நம் நாடு 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக விளங்கும்போது, நாட்டு மக்கள் அனைவரும் நலமாகவும், வளமாகவும் வாழ்வார்கள் என்பது உள்ளிட்ட ஏராளமான வெற்று நம்பிக்கை தரும், நடைமுறை சாத்தியங்களற்ற பல உறுதிமொழிகளை அள்ளித் தெளிக்கின்ற கானல் நீர் தோற்றம் அவை! நாட்டில் பதுங்கியிருக்கும் அனைத்து கருப்புப் பணமும் வெளியே கொண்டு வரப்படும் என்றும், பத்து கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் நமது மாண்புமிகு பாரத பிரதமர் சென்றமுறை பிரதமரானவுடன் பல உறுதிமொழிகளை அளித்தார். ஆனால் அவற்றில் எதுவும் உறுதியாக நிறைவேற்றப்படவில்லை.

பட்ஜெட் அல்ல ஃபட்ஜெட்

நாட்டில் 6.1 சதவிகித வேலையில்லாத் திண்டாட்டம் நிலவும்போது, நாடு 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நிலைக்கு உயர்த்தப்படும் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது ஒரு மிகப்பெரிய மோசடியே ஆகும். இந்தியாவின் பெரும் பலமே தொழிற்சாலைகளில் பணியாற்றும் பாரம்பரியமான தொழிலாளர்களையும், அதன் வளர்ச்சி தொழில் நுணுக்கத் திறன் பெற்ற இளைஞர்களின் மனித ஆற்றலையும் சார்ந்து இருப்பதே ஆகும். ஆனால், தவறான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாதது, மற்றும் ரூபாயின் மதிப்பு குறைந்து போனது ஆகியவை மிகப் பெரிய அளவில் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கிவிட்டன.

பட்ஜெட் தெளிவான கொள்கை முடிவுகளை அறிவிப்பதாக இல்லாமல், ஃபட்ஜெட்டாக (ஒரு திரிக்கப்பட்ட குளறுபடியான பட்ஜெட்) உள்ளது. அதனை நான் ஃபட்ஜெட் என்று கூறுவது ஏன் என்று விளக்கமளிக்கிறேன்.

வரி மூலம் கிடைக்கின்ற நிகர வருமானம் 2018-2019 ஆம் ஆண்டில் உத்தேசமாக 13.16 லட்சம் கோடியாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையின் இரண்டாம் தொகுதியின் புள்ளி விவர இணைப்பு 2.5 வெளிப்படுத்துகிறது. ஆனால் பட்ஜெட்டில் அது 14.84 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அதனால்தான் இதனை ஒரு குழப்பமான அறிக்கை (ஒன்றுமே இல்லாததற்கு மிகப் பெரிய பாராட்டுதல்-விளம்பரம் தரும் பட்ஜெட்) என்று நான் கூறுகிறேன்.

இந்தியா ரத்தம் சிந்துகிறது

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துக்கு நான் மீண்டும் வரும்போது, காலம் சென்ற தாதாபாய் நவ்ரோஜி அவர்களை மறுபடியும் நினைக்க வேண்டியிருக்கிறது. மிகவும் புகழ் பெற்ற தனது உரையில் அவர் சாலிஸ்பரி பிரபுவிடமிருந்து பெறப்பட்ட ‘இந்தியா ரத்தம் சிந்தவேண்டும்’ (ஐனேயை ஆரளவ க்ஷந க்ஷடநன) என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் இருந்து கீழ்க்கண்ட எடுத்துக்காட்டை, எடுத்துக் காட்டுவதற்கு நான் விரும்புகிறேன்.

இந்தியாவுக்கான இங்கிலாந்து நாட்டு செயலாளர் சாலிஸ்பரி பிரபு பேசிய பேச்சிலிருந்து அதன் தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு, தாதாபாய் நவ்ரோஜி அவர்கள் பின்வருமாறு தனது உரையைத் துவக்குகிறார். ‘ஒரு நாட்டை ரத்தம் சிந்த வைப்பது என்றால் என்ன பொருள் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அரசாங்கம் என்று இருந்தால் மிகவும் நிச்சயமாக மக்கள் அதற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால், மக்கள் மீது வரிவிதிப்பதற்கும், மக்களை ரத்தம் சிந்தச் செய்வதற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது’.

நான் அரசைக் கேட்க விரும்புகிறேன் – கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்கிறீர்கள். பொதுத்துறையில் உள்ள அரசின் பங்குகளை தனியாருக்கு விற்கிறீர்கள். ஆனால், நடுத்தர மக்களுக்கும், பாமர மக்களுக்கும் வரி தள்ளுபடி செய்வதும் இல்லை, விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதுமில்லை, கூடவே, வரியை மட்டும் உயர்த்துகிறீர்கள். அதனால் பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. இது நம் நாட்டை மேலும் ரத்தம் சிந்தச் செய்வதாக இல்லையா?

குடும்பங்களின் சேமிப்பு தங்கம்

விவசாயிகளின் நலனே நாட்டின் முக்கியமான அம்சமாக விளங்குவது என்று காந்திஜி கூறியதை நீங்கள் நம்புவது உண்மையெனில், பிச்சை போடுவது போல 6,000 ரூபாய் கொடுத்துவிட்டு, அவர்களை நீங்கள் நிர்கதியில் நிறுத்தி இருப்பீர்களா? இது நியாயமற்ற மிகமிகக் குறைந்த தொகையாகும். நமது மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் கஜா புயலின் போது தமிழகத்துக்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறாமல் புறக்கணித்துவிட்டார் என்று தமிழ்நாட்டு மக்கள் இன்றுவரை கடும் வருத்தமுடன் இருக்கிறார்கள் என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் இங்கே பதிவு செய்வதற்கு நான் விரும்புகிறேன்.

தங்க விலை உயர்வைப் பற்றிக் குறிப்பிட நான் விரும்புகிறேன். அது நாட்டை ரத்தம் சிந்தச் செய்யவில்லையா? பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் நம் நாட்டை பெண்களால் வழிநடத்திச் செல்லப்படும் ஒரு நாடாக ஆக்குவது என்ற ஒரு மாற்றம் நிகழும் என்று மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறினார். அப்படி இருந்தால், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி ஏன் 10 சதவிகிதத்தில் இருந்து 12.5 சதவிகிதத்திற்கு உயர்த்தப்பட்டது?

நடுத்தரப் பிரிவு இந்தியப் பெண்களை இது பெருமளவில் பாதிக்கும். இப்போதும் கூட இந்திய குடும்பங்களின் சேமிப்பு தங்கமாகத்தான் இருக்கிறது என்பதே இதன் காரணம். அடிமட்டத்து, ஒடுக்கப்பட்ட பிரிவு பெண்களுக்கும், அன்றாட கூலி வேலை செய்யும் சாமான்யமான பெண்களுக்கும் தங்கத்தாலான தாலி கூட ஒரு தொலைதூரக் கனவாக ஆகிவிட்டது. இது மேலும் இந்தியாவை ரத்தம் சிந்தச் செய்யவில்லையா?

தனியார் மயம் என்னும் தாக்குதல்

நிதிநிலை மசோதா என்ற பெயரை நான் பயன்படுத்தலாம் என்றால், அது வரவு – செலவு திட்டத்தின் நொய்மை அடைந்த சகோதரன் போலவே இருக்கிறது. அரசின் கார்ப்பரேட் ஆதரவு, பாமர மக்கள் எதிர்ப்பு கொள்கைகளையே கிளிப் பிள்ளை போல திரும்பத் திரும்ப அது கூறிக் கொண்டே இருப்பதுதான் இதன் காரணம். பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது என்பது, இந்தியாவை மேலும் மேலும் ரத்தம் சிந்தச் செய்யும் ஒரு செயலாகும்.

பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்கள், மாற்றுத் திறனாளிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் அனைவருக்கும் மேலாகச் சிறுபான்மை மக்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பதை வைத்துத்தான் ஒரு நாட்டின் பெருமையினையும், எதிர்காலத்தையும் கணிக்க முடியும். ஆனால், மக்கள் கலவரக் கும்பல்களால் அடித்துக் கொல்லப்படுகிறார்கள்; வேட்டையாடப்படுகிறார்கள். ஜனநாயகம் சிதைக்கப்பட்டு பணநாயகம் மேலோங்கி இருக்கிறது.

அவை இந்தியாவை மேலும் மேலும் ரத்தம் சிந்தச் செய்யாதா? நாடு முழுவதிலும் ஏமாற்றமும், வெறுப்புடன் கூடிய கவலை உணர்வும் நிலவுகிறது என்பதை ஒரு பிராந்திய மொழிக் கவிஞராக நான் உணர்கிறேன். பன்முகத் தன்மை, பிராந்தியக் கோட்பாடு, வேறுபட்ட தன்மை, கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மை ஆகிய அனைத்தும், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என்று மாநில, தனிமனித உரிமைகளை மழுங்கடிக்கும் முழக்கத்தினால், அடக்கி ஒடுக்கப்படுகின்றன!

புகழ் என்னும் கோயிலுக்கு வழி

பின்னாளில் ஆர்போர்டின் இளவரசராக ஆன சர் ராபர்ட் வால்போல் என்பவர் 1719 ஆம் ஆண்டு பிரபுக்கள் அவையில் பேசும்போது கூறிய கருத்தில் இருந்து ஓர் எடுத்துக்காட்டைக் காட்ட நான் விரும்புகிறேன் , ‘பூமியில் இருக்கும் மிகச் சிறந்த ரோமானிய பேரறிஞர்களால் வைக்கப்பட்டுள்ள புகழ் என்னும் கோயில், நற்பண்புகள் என்ற கோயிலுக்குப் பின்னேதான் அமைந்துள்ளது. நற்பண்புகள் வழியாக இல்லாமல் புகழ் என்னும் கோயிலுக்கு எவராலும் வர முடியாது’ என்பதைக் குறிப்பதே அது. இந்த காட்சி நீடித்தால், நமது நற்பண்புகள் அனைத்தையும் நாம் இழந்துவிடுவோம் என்பதுடன் இந்தியா மேலும் மேலும் ரத்தம் சிந்தவும் நேரும். விளக்கம் பெறுவதற்கான சில கேள்விகள் என்னிடம் உள்ளன.

நீலப்புரட்சி சாதாரண மீனவருக்கு உதவுமா?

எனது சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் பெரும் எண்ணிக்கையிலான மீனவர்கள் வசிக்கின்றனர். தொழில் என்ற உண்மையான கருத்தில், விவசாயம், மீன்பிடிப்பு மற்றும் தோட்டக் கலை ஆகியவை இன்றுவரை நடத்தப்படவில்லை. அது மட்டுமன்றி, புயல், சுனாமி மற்றும் ஆதாரங்களின் பற்றாக்குறை போன்ற இயற்கைப் பேரழிவுகளின் கடுந்தாக்குதலையும் அவை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

விவசாயிகள் நல்வாழ்வுத் திட்டங்கள் என்னும் குடையின்கீழ் அனைத்து மீனவர்களையும் ஒன்றாகக் கொண்டு வரும் நோக்கத்துடன் கூடிய ‘நீல புரட்சியின்’ ஒரு பகுதியாக விளங்கும் ‘மத்சய சம்பதா யோஜனா’ என்ற திட்டத்தை மரியாதைக்குரிய நிதி அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளது மட்டுமன்றி, எளிதாகக் கடன் பெறும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம் மீன்வளர்ப்பை மேம்படுத்தவும் உறுதி அளித்திருக்கிறார். சிறப்பு மீன்வள, கடல்வள கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் ஒன்றின் கீழ் கடந்த ஆண்டு 7,522 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாகவும், மீன் வள கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி நிர்வகிப்பதற்கு தனியார் முதலீடுகளைக் கவர்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

அன்றாடம் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் கடலின் மகனான ஒரு சாதாரண மீனவன் எந்தவித முதலீடும் இன்றி இந்த திட்டங்களில் பங்குபெற்று எவ்வாறு வாழ்க்கை நடத்த முடியும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

இத்திட்டம், இம்மண்ணின் பூர்வகுடி மீனவர்களின் நலனுக்கானதாக இருக்காது. மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே பயன் அளிப்பதாக இருக்கும். தனியார் முதலீடு என்று இங்கே குறிப்பிடப்பட்டு உள்ளதே இதற்கு சான்றாகும்.

தனது தொகுதி தென் சென்னையின் தேவைகள்

சென்னையின் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்பப் பூங்கா எனது தொகுதியில் உள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்துள்ள இந்த யுகத்தில், முக்கியமான கவனம் இப்போது செயற்கை ஒற்றறிவது அல்லது புலனாய்வு என்பதற்கு மாற்றப்பட்டுள்து. 5ஜி அலைக் கற்றை அறிமுகப் படுத்தப்படுவதால் ஏற்படக்கூடிய வாய்ப்புகளை நோக்கி இந்த தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எவை? இந்த அரசில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு?

தியாகராயர் நகர் மற்றும் மைலாப்பூர் இரண்டு சட்ட மன்றத் தொகுதிகளுமே முக்கியமான சென்னை தெற்கு பாராளுமன்ற தொகுப்பு பகுதிகளாகும். ஜி.எஸ்.டி. ஒப்புதல் பெற்ற எம்.எஸ்.எம்.ஈ (ஆளுஆநு) பிரிவுகளுக்கு ரூபாய் ஒரு கோடி அளவுக்கான கடன் 59 நிமிடங்களில் வழங்கப்படும் என்பதை நிதி அமைச்சர் வலியுறுத்திக் கூறியுள்ளார். அதை நான் பாராட்டுகிறேன். ஆனால், அது போன்று கடன்கள் வழங்குவதற்கு வங்கிகள் தயங்குகின்றன.

இந்தத் திட்டத்தின் மூலம் உண்மையாகக் கடன் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பற்றிய புள்ளி விவரங்களை அரசால் வழங்கமுடியுமா?

வருமான வரி மற்றும் இதர வரி, ஜி.எஸ்.டி., போன்ற வரித் துறைகளில் பல முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவர்களது வருமானம் என்னவாக இருந்தாலும், ஐ.டி.ஆர். (ஐகூசு) வருமான வரித் தாக்கல் அறிக்கைகளைக் கீழ்க்கண்ட பிரிவினர் பதிவு செய்ய வேண்டும் என்று 139 ஆவது பிரிவு என்னும் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு மின்சாரத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாகவும், ஆண்டு ஒன்றுக்கு அயல்நாட்டுப் பயணங்களுக்காக இரண்டு லட்சத்திற்கும் மேலாக செலவழிப்பவர்கள் இவர்கள். அது எப்படி சாத்தியமாகும்? கூட்டுக் குடும்ப நடைமுறை இன்னமும் நிலவும் நாடு நம் நாடு. பல உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்தால் மின்சாரத்துக்கான செலவை எவ்வாறு ஒரு வருடத்தில், ஒரு லட்ச ரூபாய்க்குள் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்?

புறநானூறுக்கு பதில் நற்றிணை

சங்க இலக்கியமான நற்றிணையில் ஒரு பாடல் உள்ளது. அது கூறுவதாவது:

மரம் சா மருந்தும் கொள்ளார், மாந்தர்;

உரம் சாச் செய்யார், உயர்தவம்; வளம் கெடப்

பொன்னும் கொள்ளார், மன்னர் நன்னுதல்!

நாம் தம் உண்மையின் உளமே

மூலிகைச் செடியினம் அழிந்து போகும் அளவுக்கு அந்த மூலிகைச் செடியை, சிறப்பான, பொறுப்பான நிலையில் உள்ள மக்கள் பொதுவாக முற்றிலுமாகப் பறித்துவிடமாட்டார்கள். தங்களது ஆற்றல் இழந்து போக்கும் அளவுக்கு அவர்கள் தவம் செய்ய மாட்டார்கள். அதேபோல ஒரு நல்ல அரசன் அதிக வரிவிதித்து குடிமக்களை வறுமையில் தள்ளித் துன்புறுத்த மாட்டான். அத்தகைய நிலைப்பாட்டில் உள்ள மனிதர்கள் எப்போதுமே தவறு செய்யாமல் இருப்பதால்தான் இந்த உலகம் பிழைத்திருக்கிறது. ஆனால், இந்த அரசு இதற்கு நேர்மாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது.

அரசின் விருப்பமான மும்மொழி திட்டத்தை நடைமுறைப்படுத்தவே, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி ஆசிரியர்களை நியமிப்பதற்கு ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் என்பதை மிகுந்த மன வேதனையுடனும், கவலையுடனும் சுட்டிக்காட்ட நான் விரும்புகிறேன். தி.மு.கழகமும், எங்களது தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் இரு மொழிக் கொள்கையை மட்டுமே ஆதரிக்கின்றனர் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றேன். அதற்கு வலுச்சேர்க்க, எங்கள் கட்சியின் தோற்றுனரும், தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் அறிவிப்பு ஒன்றை இங்கு நினைவுபடுத்த நான் விரும்புகிறேன்.

அவர் கூறியதாவது: நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, மூன்று சட்ட மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றச் செய்தேன். சென்னை மாநிலம் என்றிருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தது ஒன்று. மத சடங்குகள், சம்பிரதாயங்கள் இல்லாமல் நடத்தப்படும் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்பதற்கான சட்டம் மற்றொன்று. இருமொழிக் கொள்கையை மட்டுமே கடை பிடிப்பது என்ற சட்டம் மூன்றாவது. இந்த சட்டங்களை நீக்கவோ அல்லது மாற்றவோ துணிவு கொண்டவர்களாக எவரும் இருக்க மாட்டார்கள்!

கவிஞர் ஷெல்லியின் வரிகளுடன் எனது உரையை நான் முடித்துக் கொள்கிறேன். ‘வாழ்க்கையின் முட்கள் மீது நான் வீழ்ந்துவிட்டேன்; நான் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறேன்’ என்பதே அது!

இந்த வரவு – செலவு திட்டம் இந்தியாவை மேலும் ரத்தம் சிந்தச் செய்துள்ளது என்றும் அவர் பேசினார்.

நாடாளுமன்றதில் தூங்கியது குறித்தும் அவர் மேக்கப் போடுவது குறித்தும் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வந்த நிலையில் தன்னுடைய முதல் உரையிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் திமுகவின் அழகான நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K