முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழாவா? ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஸ்டாலின் முடிவு

0
112
MK Stalin-News4 Tamil Online Tamil News Channel
MK Stalin-News4 Tamil Online Tamil News Channel

முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழாவா? ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஸ்டாலின் முடிவு

சமீபத்தில் தமிழக முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்யும் வகையில் தமிழகத்துக்கு வந்துள்ள முதலீடுகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதற்காக 13 நாட்கள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாலை தமிழகம் திரும்பியுள்ளார். இந்த பயணம் தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “வெளிநாட்டுப் பயணத்தின்போது அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து, மொத்தம் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளோம். இதன்மூலம் 35,520க்கும் மேற்பட்ட நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாடுகளின் முதலீடுகளைப் பெறப் போகிறோம் என்று சொல்லி வீராப்புடன் சென்று வெறுங்கையுடன் திரும்பியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று விமர்சித்துள்ளார்.

இப்போது போட்டுள்ளதாகக் கூறப்படும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன ஆகுமோ என்றும் தெரியவில்லை எனச் சந்தேகம் எழுப்பியுள்ள ஸ்டாலின், “முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தைரியம் இருந்தால், அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனை கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன; அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு – செயல்படும் தொழில் நிறுவனங்கள் எத்தனை; அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டன என்பதையெல்லாம் விரிவான வெள்ளை அறிக்கையாக உருவாக்கி, இதோ பிடியுங்கள் நீங்கள் கேட்கும் வெள்ளை அறிக்கை என்று வெளியிடத் தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்படி உண்மைகளை வெளியிட்ட ஒரு வாரத்தில் முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா நடத்தத் தயாராக இருப்பதாகவும், தன்னுடைய சவாலை ஏற்க முதல்வர் தயாரா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “இரண்டு நாட்களில் தமிழக மக்களுக்குப் பதில் வேண்டும்; இல்லாவிட்டால், முதலமைச்சரின் வெளிநாடுகள் பயணம் மர்மங்கள் நிறைந்தது என்று ஊர் முழுவதும் பேசிக்கொள்வது உண்மைதான் என்று உறுதியாகிவிடும்” என்றும் தனது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்டாலின் பொறாமையில் பேசி வருவதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்