அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்

0
147

அரசியலுக்காக சாதித் தலைவர்களை நாடிச் செல்லும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்

தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியாக இருந்தாலும் அதை ஒரு குறிப்பிட்ட சாதி.மதம் அல்லது மொழி அடிப்படையில் பிரித்து பார்ப்பதே வழக்கமாகி விட்டது. அதிலும் குறிப்பாக பெரியார் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறும் திமுக சாதி மதமற்ற அரசியலை செய்வதாக கூறி தான் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறது. ஆனால் இதை அரசியல் அறிந்தவர்கள் நன்றாக உற்று கவனித்தால் சாதி மதமற்ற அரசியல் என்பதற்காக தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சாதகமாகவும்,வேறு ஒரு பிரிவினருக்கு எதிராகவும் திமுக செயல்பட்டு வருவது தெளிவாக புரியும். இதையெல்லாம் உறுதி செய்யும் வகையில் தான் திமுகவின் கடந்த கால செயல்பாடுகள் அமைந்துள்ளன.

திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி இருக்கும் போது, பாமக, வி.சி.க, புதிய தமிழகம் கட்சிகளை தேர்தலுக்காக கூட்டணியில் இணைக்க வேண்டிய கட்டாயம் வந்தால், ‘அவை சாதிக் கட்சிகள் அல்ல. சாதிக்கும் கட்சிகள்’ என்று நியாயப்படுத்துவார். அதே கட்சிகள், திமுக கூட்டணிக்கு தேவையில்லை என்ற நிலையெடுத்தால், அவற்றை சாதிக்கட்சிகள் என்று விமர்சிப்பார்.இதில் அதிகம் பாதிக்கப்பட்டது மருத்துவர் ராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி தான். ஆரம்பத்தில் வன்னியர் சங்கமாக இருந்தாலும் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பிறகு பாமக ஆரம்பித்து அரசியலுக்குள் நுழைந்த பிறகு தொடர்ந்து ஒட்டு மொத்த தமிழக மக்களுக்காக தான் பாமக நிறுவனர் ராமதாஸ் போராடி வருகிறார்.ஆனால் திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் தாங்கள் வெற்றி பெற அக்கட்சியின் வாக்குகளை பயன்படுத்தும் போது சாதகமாக ஏற்று கொள்கிறார்கள். இதுவே பாமக எதிரணியில் இருக்கும் போது அக்கட்சியை சாதிக் கட்சி என கூறி கடுமையான விமர்சனங்களை வைக்கிறார்கள்.

கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக இருக்கும் போது தைரியமாக ‘தனித் தொகுதி தலித் மிகுதி’ என்று கலைஞரால் அழைக்கப்பட்ட தொகுதிகளில் மட்டுமின்றி, மற்றவர்கள் போட்டியிடும் பொதுத் தொகுதிகளிலும் பட்டியலின வேட்பாளர்களை நிறுத்துவார்கள். அதாவது திருச்சி மக்களவைக்கு தலித் ஏழுமலையையும், மதுரவாயல் சட்டப்பேரவைக்கு சிபிஎம் கட்சியின் பீமராவையும் நிறுத்தி, ஜெயலலிதா வெற்றி பெற வைத்தார் என்பதே அதற்கு உதாரணம்.

பொதுவாக, கடந்த கால அரசியலை பார்க்கும் போது திமுக, அதிமுக கட்சிகள் அந்தந்த தொகுதிகளில் செல்வாக்குள்ள சாதி வேட்பாளர்களையே நிறுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற செயல்களை அந்த குறிப்பிட்ட சாதிகளை, வலுப்படுத்தவே உதவும் என்பது பற்றி அவர்கள் கவலைப்படாமல் அரசியல் வெற்றி ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்கள். உள்கட்சி காரணங்களுக்காக, ஆர்.கே.நகர் சட்டப்பேரவைக்கு, ஸ்டாலின் தலைமையிலான திமுக, நாடார் சமூகத்தைச் சேர்ந்த சிம்லா முத்துச் சோழனை நிறுத்தாததால் ஏற்பட்ட படுதோல்வி நிச்சயமாக திமுக தலைமையை இது குறித்து சிந்திக்க வைத்துள்ளது.

இப்போது அடுத்து வரவுள்ள 2021 சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலுக்காக தங்களை தயார் செய்து வருகிறது திமுக. நடந்து முடிந்த மக்களவைப் பொதுத்தேர்தலில், மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தாலும் வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவால் திமுக தலைமை சற்று அச்சமடைந்துள்ளது.

ஜெயலலிதா, 2016 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு இளைஞர் பேரவை பெயரில் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை பெயரில் கருணாஸ், முஸ்லிம் அடையாளத்திற்கு, மனிதநேய ஜனநாயகக் கட்சி பெயரில் தமீமுன் அன்சாரி என்று ‘சாதி ரீதியிலான அடையாள அரசியலை’ கையாண்டு அதன் மூலம் குறிப்பிட்ட உறுப்பினர்களை வெற்றி பெற வைத்து சட்டப்பேரவைக்கு சேர்த்துக்கொண்டார்.

அதுபோல மு.க.ஸ்டாலினும், தென்மாவட்டங்கள், கிழக்கு மாவட்டங்களைப் பொறுத்தவரை, சாதித் தலைவர்களது பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்வுகள் வரும் காலங்களில் அது தன்னுடைய அரசியலுக்கு முக்கியமானவை என உணந்துள்ளார். பெரம்பலூர் மக்களவைக்கு, பாரிவேந்தர் மூலம் பார்கவ குலமான உடையார்கள், நாமக்கல் மக்களவைக்கு கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, சிதம்பரம், விழுப்புரம் மக்களவைத் தொகுதிகளுக்கு, வி.சி.க., என்பது போல சாதி மதமற்ற அரசியலை கையிலெடுப்பதாக கூறும் திமுகவும் சாதி அடிப்படையிலான அடையாள அரசியலை சேர்த்துக் கொண்டது.

தற்போது, இது அடுத்த நிலையை அடைந்து சம்பந்தபட்ட சாதித் தலைவர்களது விழாக்களில் திமுக தலைவரான ஸ்டாலின் பங்கு கொண்டு வாக்குகளை ஈர்ப்பது என்ற அளவிற்கு வந்துள்ளனர். வழக்கமாக, முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்திக்கு மட்டுமே, மு.க.ஸ்டாலின் செல்வார். ஆனால் டி.டி.வி. தினகரனோ, இரண்டு ஆண்டுகளாக, தேவர் ஜெயந்தி மட்டுமின்றி, ஒண்டிவீரன் பூலித்தேவன், இமானுவேல் சேகரன், வல்வில் ஓரி ஆகியோர் நிகழ்ச்சிகளுக்கும் சென்று கொண்டிருக்கிறார்.

ஆகவே இனி திமுக தலைவரும் இது போன்ற வாய்ப்புகளை விடக் கூடாது என்று முடிவெடுத்து விட்டார். இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், அருந்தியர்களின் அடையாளத்திற்காக ஒண்டிவீரன், மறவர் அடையாளத்திற்கு பூலித்தேவன் நிகழ்ச்சிகளுக்கும் சமீபத்தில் சென்று வந்தார். சென்ற ஆண்டு கிராம சபைகள் பெயரில் திமுக கூட்டிய சபைகளில், உதயநிதியையும், கனிமொழியையும், தேவேந்திர குல வேளாளர் இளைஞர்கள், ‘ஏன் ஸ்டாலின் இமானுவேல் சேகரன் நிகழ்ச்சிக்கு வரவில்லை?’ என்று கேள்வி கேட்டுத் துளைத்து விட்டனர். அதுவே நடந்து முடிந்த தென்மாவட்ட, மக்களவைத் தேர்தல் பரப்புரைகளிலும் தொடர்ந்தது.

தேவேந்திர குல அடையாளத்துடன் கிருஷ்ணசாமியும், ஜான் பாண்டியனும், அதிமுக பக்கம் இருந்தனர். ஆனாலும், நடந்து முடிந்த மக்களவைப் பொதுத்தேர்தலில், திமுகவின் தனுஷ்குமாருக்கு தென்காசியிலும், கனிமொழிக்கு தூத்துக்குடியிலும், முஸ்லிம் லீக் நவாஸ் கனிக்கு இரு தேவர் சமூக வேட்பாளர்களை எதிர்த்து ராமநாதபுரத்திலும், தேவேந்திர குல வாக்குகள் கணிசமாக விழுந்து திமுக தலைமைக்குத்தெரியும்.

இந்தப் பின்னணியில் இந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் நிகழ்ச்சிக்கு பரமக்குடிக்கு ஸ்டாலின் செல்கிறார். இதனை உறுதி செய்யும் வகையில் இதற்கான விளம்பரங்கள் செய்வதற்கு அனுமதி கோரி திமுகவின் ராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவே தேவேந்திர குல வாக்காளர்களை திருப்திப்படுத்தும் என திமுக தலைமை நம்புகிறது. அடுத்து மருது பாண்டியர்கள் நிகழ்ச்சி, தேவர் ஜெயந்தி போன்ற விழாக்களிலும் இது தொடரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, தங்கத் தமிழ்செல்வனுக்கு கொ.ப.செ., கலைராஜனுக்கு இலக்கிய அணிச் செயலாளர் பதவிகள் கொடுத்ததன் மூலம் பிறமலைக்கள்ளர், மற்றும் கள்ளர் சமூகங்களை திருப்திப்படுத்தலாம் என திமுக எடுத்த முடிவு தெளிவாக புரிகிறது.

மற்ற கட்சிகளை சாதிக் கட்சி என விமர்சனம் செய்து வாக்குகளை பெற்ற திமுகவே இப்படி சாதி அடையாளத்தை பயன்படுத்தி இரட்டை வேட அரசியல் செய்வது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில் சாதி அடிப்படையில் பள்ளி மாணவர்கள் கையில் கயிறு கட்டி வருவதை திமுக எதிர்த்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

அரசியலுக்காக எந்த நிலைக்கும் இறங்கலாம் என்பது திமுகவின் இந்த இரட்டை வேடம் அம்பலமாவதின் மூலம் தெளிவாக தெரிகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K