ரேஷன் கடைகளில் சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகம் விநியோகம்!

0
79

கோவையில் கொரோனா நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகம் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் 1,400-க்கும் அதிகமான ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த கொரோனா காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவும் முகக்கவசத்தை ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கோவையில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் கொரோனா நோய் தடுப்பு மருந்துகள் மற்றும் சத்து மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகம் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்து பெட்டகத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மாத்திரைகள், சூரணம், கபசுர குடிநீர் பாக்கெட் மற்றும் இவற்றை பயன்படுத்தும் முறை குறித்த விளக்க குறிப்பு போன்றவை இருக்கும்.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு மருந்து பெட்டகம் என்ற அடிப்படையில் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக அம்மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசின் இந்த புதிய முயற்சியினால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன் பெறுவார்கள் என கருதப்படுகிறது.

author avatar
Parthipan K