பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட முன்விரோதம்; இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்ட இளைஞர்!

0
122

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கௌரி பேட்டை கம்பர் தெருவைச் சேர்ந்த மனோஜ் என்பவர் சொந்தமாக டிராக்டர் வைத்து குடியிருப்புப் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழ்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம்போல ஆவடி பகுதியில் மனோஜ் தண்ணீர் விநியோகம் செய்துகொண்டிருந்தார்.

அதன் பிறகு மற்றொரு குடியிருப்புக்கு மனோஜ் டிராக்டரில் செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த பிரபு, சதீஷ், உள்ளிட்ட 3 பேர் வழிமறித்திருக்கிறார்கள். அதன் பிறகு எதிர்பாராதவிதமாக திடீரென்று இரும்பு கம்பியால் மனோஜ் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிகாலையில் குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த மனோஜ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

அந்த சமயத்தில் ஆவடி வீட்டு வசதி வாரிய பகுதியைச் சேர்ந்த பிரபு சதீஷ் பட்டாபிராமை சார்ந்த கலையரசன் உள்ளிட்ட 3 பேர் மனோஜை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்திருப்பது அந்த பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

அதனடிப்படையில், குற்றவாளிகளை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தநிலையில், குற்றவாளிகள் பிரபு வசதி உட்பட 3 பேரும் திருவள்ளூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

விசாரணையில் ஏற்கனவே பிரபு, சதீஷ், மனோஜ், உள்ளிட்ட 3 பேருக்கும் குடிநீர் விற்ற பணம் 10,000 ரூபாயை பங்கு போடுவதில் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரியவந்தது.

ஆகவே இந்த முன்விரோதம் காரணமாக, அவர் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு நடுவே சரணடைந்தவர்களை ஆவடி காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.