ஓய்வை அறிவிக்கவிருக்கும் தோனி!

0
83

ஓய்வை அறிவிக்கவிருக்கும் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை பிரித்தால் தோனிக்கு முன் தோனிக்கு பின் பிரிக்கலாம். இன்றைக்கு கிரிக்கெட் உலகில் முதன்மையான அணியாக இந்திய அணி திகழ்கிறதென்றால் அதற்க்கு முக்கிய காரணம் மகேந்திர சிங் தோனி என அடித்து கூறலாம்.

இது குறித்து தொடர்வதற்க்கு முன் இந்திய அணி கடந்து வந்த பாதையை பார்ப்போம். 1983ல் நடைபெற்ற உலக கோப்பையை இந்திய அணி வென்ற பின்னர் தான் உலக அணிகள் நம்மை கவனிக்க துவங்கின. கபில்தேவ் தலைமையில் இங்கிலாந்துக்கு பயணித்த அந்த அணி உலக கோப்பையை வெல்லும் அதுவும் இறுதி போட்டியில் அப்போதைய கிரிக்கெட் உலகின் முதன்மையான ஜாம்பவான்கள் நிறைந்த மேற்க்கு இந்திய அணியை வீழ்த்தும் என கூறியிருந்தால் அனைவரும் சிரித்திருப்பார்கள்.

ஆனால் அதை சாத்தியமாக்கி உலக கோப்பையை இந்தியா வென்று நாடு திரும்பியது. அதற்க்கு அடுத்தடுத்த உலக கோப்பையில் இந்தியா மீது பெரும் எதிர்பார்ப்பிருக்க, அரை இறுதியில் தோற்று வெளியேறியது. கபில் தேவ், கவாஸ்கர் என இந்திய அணியில் ஜாம்பவான்கள் இருந்தாலும் இந்திய அணி பெரிய எழுச்சியை பெற முடியவில்லை.

அப்பொழுது தான் 1989ம் ஆண்டு 16 வயதே நிறவடைந்த ஓர் சிறுவன் இந்திய அணியில் அடியெடுத்து வைத்தான். அவன் தன் பிற்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் அடையாளமாக இருக்க போகிறான் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அவர் தான் சச்சின் டெண்டுல்கர். தன்னுடைய நேர்த்தி மற்றும் அதிரடியான ஆட்டத்தால் மீண்டும் உலக கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைத்தார்.

அது வரை 50 ஓவர் கிரிக்கெட்டில் 200 ரண்களை அடிப்பதே பெரிய ஸ்கோராக கருத்தப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில், ஓப்பனிங் பேட்டிங் என்பது எப்படி இருக்க வேண்டும், முதல் 15 ஓவர்களை எப்படி ஆட வேண்டும் என உலகுக்கே எடுத்துகாட்டாக விளங்கினார் சச்சின். ஆனால் அவரின் சிறந்த ஆட்டமே அவருக்கு சுமையாக மாறியது. ஒரு கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்து சென்று விட்டால் ஆட்டமே முடிந்து விட்டது என்ற நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது.

மற்றொரு பக்கம் கிரிக்கெட் ஃபிக்சிங் புகாரில் சிக்கினார் அப்போதைய தலைவரான முகமது அசாருதின். இதனால் பல வருடங்களாக அவர் வகித்து வந்த தலைவர் பதவியை யாருக்கு அளிப்பது என்ற கேள்வி எழுந்தது. உலக கிரிக்கெட் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கும் சச்சினிடம் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

அவரை நம்பி மட்டுமே இந்திய பேட்டிங் வரிசை இருந்ததால், தலைவர் பொறுப்பு அவருக்கு கூடுதல் சுமையானது. அது அவரது பேட்டிங்கையும் பாதிக்க ஒரு கட்டத்தில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சச்சின். அப்போது அணியில் பல மூத்த வீரர்கள் இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத சவுரவ் கங்குலியிடம் தலைவர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

அவர் அவ்வளவு சிறப்பாக அணியை வழி நடத்தி செல்வார் என யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. சரியாக ஆடாத ஆட்டக்காரர்களை அணியிலிருந்து நீக்கிய கங்குலி, மாநில அளவில் சிறப்பாக ஆடும் வீரர்களை கண்டறிந்து அவர்களை அணிக்குள் சேர்ந்து இந்திய கிரிகெட்டில் எழுச்சியை உருவாக்கினார். வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி, முகமது கைஃப், ஜாகிர் கான், ஆஷிஷ் நேரா, ஹர்பஜன் சிங், திணெஷ் கார்த்திக், பார்த்திவ் பட்டேல் என கங்குலி தலைமையில் உருவான கிரிக்கெட் வீரர்களை அடுக்கி கொண்டே போகலாம்.

250 ரன்களை கடப்பதற்கே ஒரு காலத்தில் கஷ்டப்பட்ட இந்திய அணி கங்குலி தலைமையில் 300 ரண்களை எல்லாம் சர்வ சாதரணமாக கடந்தது. கங்குலி தலைமையிலான இந்திய அணி 2003ம் ஆண்டு உலக கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது.

ஒவ்வொருவருக்கும் ஏற்ற தாழ்வான நேரம் இருக்கும் என்பது கங்குலியையும் விட்டு வைக்கவில்லை. ஒரு பக்கம் நடிகை நக்மாவுடன் காதல் கிசு கிசு மற்றொரு பக்க பேட்டிங்கில் சொதப்பல் என்றிருந்த கங்குலி, தலைவர் பதவி மட்டுமல்லாமல் அணியிலிருந்தும் விலக்கப்பட்டார். அவரை தொடர்ந்து மூத்த வீரரான ராகுல் டிராவிட்டுக்குத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

அப்போது பலமாகக் கருதப்பட்ட அந்த இந்திய அணி எதிர்பாராத விதமாக 2007ம் உலக் கோப்பையில் போட்டி சுற்றில் பங்களாதேஷிடம் தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்குச் செல்லாமலேயே வெளியேறியது. இது பெரிய அளவில் இந்திய வீரர்களின் மனநிலையைப் பாதித்தது. தோல்விக்குப் பொறுப்பேற்று டிராவிட் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் என்றாலே வெறுக்க ஆரம்பித்திருந்தனர். அந்த ஆண்டு முதன் முதலாக ICC 20 ஓவர் உலகக் கோப்பையை அறிவித்தது. சச்சின் உட்பட இந்திய அணியின் பெரும்பாலான மூத்த வீரர்கள் அதில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டாத நிலையில், சம்பிரதாயமாக புதிய வீரர்களை அணியில் சேர்ந்து அந்த போட்டிக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்தது.

மூத்த வீரர்கள் யாரும் முன் வராத நிலையில் இந்த போட்டிக்கு யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம் என்ற ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்ட சச்சின், தோனியின் பெயரைக் கூற, அவரை தலைவராக அறிவித்து இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பைக்குச் சென்றது.

அந்த அணியில் தோனி, ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், சேவாக் தவிர்த்த மற்றவர்கள் பெயரைக் கூட கிரிக்கெட் ரசிகர்கள் கேள்விப்படாத நிலையில், அந்த அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 20 ஓவர் உலக கோப்பையை வென்றது. 20 ஓவர் போட்டிக்கு ரசிகர்களிடையே இருக்கும் வரவேற்பைப் பார்த்த இந்திய கிரிக்கெட் வாரியம் 2008ம் ஆண்டு ஐபிஎல்லை அறிவித்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோணியை ஏலத்தில் எடுத்து அணி தலைவராக அறிவித்தது. அதே ஆண்டு தோனி டெஸ்ட், ஒரு நாள், 20 ஓவர் என அனைத்து கிரிக்கெட் அணிக்கும் தலைவரானார்.

தனது மென்மையான அணுகுமுறையால் அணியை வழிநடத்திய தோனி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் கவனம் செலுத்தி அதற்கான சரியான வீரர்களைக் கண்டறிந்து சிறந்த அணியாகக் கட்டமைத்தார். அதன் பலனாக சுமார் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது தலைமையிலான அணியின் மூலம் 2011ம் ஆண்டு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்தார். அவரது தலைமையில் இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் என ஐசிசியின் அனைத்து தர வரிசையிலும் முதலிடம் பெற்றது. இன்று வரை ஐசிசியின் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே அணித் தலைவர் தோனி மட்டுமே.

இந்திய அணிக்குச் சிறப்பாகச் செயல்பட்ட அதே நேரத்தில் ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறந்த அணியாக ஆக்கினார். தோனி தலைமையில் 3 ஐபிஎல் கோப்பைகள், ஒரு சேம்பினஷிப் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பாராத விதமாக சூதாட்ட புகாரில் சிக்கி இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது.

அந்த காலகட்டம் தோனிக்கு மிகவும் சவாலான காலகட்டமாக மாறியது. அவரை நிர்பந்தப்படுத்தி இந்திய அணித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தது கிரிக்கெட் வாரியம். அந்த காலகட்டம் தனது வாழ்வில் மிகவும் சோதனையான காலகட்டம் என தோனி ஓர் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இரண்டு ஆண்டு தடைக்குப் பின் மீண்டும் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும்பாலும் பழைய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்த அணியை அப்பாக்கள் அணி என அனைவரும் கிண்டலடிக்க அந்த அணியை வைத்தே அந்த ஆண்டு சேம்பியன் பட்டத்தை வென்ற தோனி, சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் இறுதிப் போட்டி வரை அணியை வழிநடத்தி வந்தார். ஒரே ரன்னில் சென்னை அணி சேம்பியன் பட்டத்தைக் கோட்டைவிட்டது.

அதன் பின் சென்ற ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கான இந்திய அணியில் தோனியை தேர்ந்தெடுத்தற்கு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதையெல்லாம் உடைக்கும் விதமாகத் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் தோனி. அதில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, அரை இறுதியில் நியூசிலாந்திடம் மோதியது.

அந்த ஆட்டத்தில் சேசிங் செய்த இந்திய அணியில் பேட்டிங் வரிசை சொதப்ப, ஆட்டம் முடிந்ததென அனைவரும் நினைத்திருந்த நிலை தோனி ஆட்டத்தின் போக்கை மாற்றி வெற்றியை நோக்கி நகர்த்தி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் ரன் அவுட் ஆக இந்திய அணி ஒரு ரன்னில் உலகக் கோப்பை வாய்ப்பை இழந்து வெளியேறியது.

அதன் பின்னர் சில போட்டிகளில் தனது பெயரைப் பரிசீலிக்க வேண்டாம் என்று கூறிய தோனி, ரானுவத்திற்க்கு சென்று பயிற்சி மேற்கொண்டார். அவர் எப்போது வேண்டுமானாலும் தனது ஓய்வை அறிவிப்பார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த 20 ஓவர் உலகக் கோப்பைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்வி கிரிக்கெட் வாரியத்திடம் ஏற்பட்டது.

ஐபிஎல் போட்டிகளில் அவரின் ஆட்டம் எப்படி வெளிப்படுகிறது என்பதைப் பொருத்து அது முடிவு செய்யப்படும் என தேர்வுக் குழு தெரிவித்திருந்தது. இதனால் இந்த ஐபிஎல் போட்டிகளுக்கு தோனி ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் காலவரையின்றி போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது. 20 ஓவர் உலகக் கோப்பையும் நடைபெறுவதற்கான சாத்திய கூறு குறைவாக உள்ள நிலையில் மீண்டும் தோனியின் ஓய்வு விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

இந்தியா முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஹர்பஜன் தோனி நிச்சயம் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவார், ஆனால் மீண்டும் இந்திய அணிக்கு ஆடும் எண்ணமில்லை எனச் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

இந்திய அணிக்கு இவ்வளவு பெருமைகளை தேடி தந்த தோனிக்கு அவர் விரும்பும் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்தி அவருக்குப் பிரிவு உபசாரம் கொடுக்க வேண்டும் என்பதே அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இதைச் செய்யுமா இந்திய கிரிக்கெட் வாரியம்?

author avatar
Parthipan K