பூஜை செய்வதாக இருந்தால் என்னை கூப்பிடாதீங்க! கோபத்தில் ஒன்றிய செயலாளரை கடிந்து கொண்ட தருமபுரி எம்பி செந்தில்குமார்

0
77

பூஜை செய்வதாக இருந்தால் என்னை கூப்பிடாதீங்க! கோபத்தில் ஒன்றிய செயலாளரை கடிந்து கொண்ட தருமபுரி எம்பி செந்தில்குமார்

தருமபுரியில் நடந்த அரசு கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வில், வழக்கம் போல இந்து முறைப்படி பூஜைக்கு ஏற்பாடு செய்த திமுக ஒன்றிய செயலாளரிடம் எம்.பி செந்தில்குமார் கோபத்துடன் கடிந்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் அங்கு நடத்தப்பட்ட பூமி பூஜைக்காக வைத்திருந்த கற்களை காலால் உதைத்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் அங்கிருந்தவர்கள் மத்தியில் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியின் போது இந்து மத சடங்கு மட்டும் நடப்பதற்கு எம்.பி செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் அதேபோல பிரச்சனை தற்போது நடந்துள்ளது.

கடந்த சில வாரம் முன்பாக தருமபுரி மாவட்டம் ஆலாபுரம் ஏரியில் சீரமைப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் தருமபுரி எம்.பி செந்தில்குமார் பங்கேற்றார். அங்கு இந்து மதம் சார்ந்து மட்டும் சடங்குகள் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அரசு விழாவில் மதச் சம்பிரதாயங்கள் நடத்தக் கூடாது என்றும், தேவைப்பட்டால் மூன்று மதத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து மத சடங்குகளை நடத்த வேண்டும் எனவும் அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் வளாகத்தில் தமிழக அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன நூலகம் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அங்கு பூமி பூஜை முடிந்த பிறகு பூஜைக்கு வைத்திருந்த கல்லை திமுக எம்.பி செந்தில்குமார் காலால் தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே, திமுகவினர் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இதுமாதிரி செய்யும் எம்பி, நிகழ்ச்சிக்கு வரக்கூடாது எனவும் அங்கிருந்தவர்கள் முணுமுணுத்து சென்றுள்ளனர்.

இதையடுத்து எம்.பி செந்தில்குமார் காரில் ஏறிச் செல்லும் போது அங்கிருந்த திமுக ஒன்றிய செயலாளர் சண்முகத்தை அழைத்து இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை கூப்பிடாதீர்கள் என கோபமாக கடிந்து கொண்டுள்ளார்.அவர் கோபமாக பேசும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது இது அரசு நிகழ்ச்சி, அனைவருக்குமான நிகழ்ச்சி. ஒரு மதம் சார்ந்த சடங்குகளை மட்டும் கடைபிடிப்பதாக இருந்தால் என்னை கூப்பிடாதீர்கள். ஒவ்வொரு இடத்திலும் பிரச்சனை செய்ய வேண்டுமா என தருமபுரி எம்.பி செந்தில்குமார் திமுக ஒன்றிய செயலாளரிடம் கோபமாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.