புயலின் கோரத் தாண்டவத்தில் மரண ஓலமிட்டு தனுஷ்கோடி அழிந்த நாள் இன்று: 55ஆம் ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுக்கள்…

0
114
Dhanuskodi

1964க்கு முன்பு பரபரப்பாக இயங்கும் தொழில் நகரமாகவும், சுற்றுலாத் தலமாகவும் இருந்தது தனுஷ்கோடி. இங்கு, துறைமுகம், மருத்துவமனை, அஞ்சல் நிலையம், தொடர்வண்டி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிடவை இருந்தன. இங்கிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு நாள்தோறும் 2 கப்பல்களும் சென்று வந்தன.

இப்படி பரபரப்பாக இயங்கி வந்த தனுஷ்கோடியை, 1964 ஆம் ஆண்டு இதே நாளில் வீசிய புயல், கனமழை மற்றும் ஆழிப்பேரலை சேர்ந்து சின்னா பின்னமாக்கின.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்த தொடர்வண்டியை சக்கரமும், தண்டவாளமும் மட்டுமே மிஞ்சும் அளவுக்கு பேரழிவு இருந்தது. அதில் இருந்த மக்களின் மரண ஓலங்கள், புயல் ஓய்ந்த பிறகு அடுத்த நாளே நாட்டு மக்களுக்கு தெரிந்தது.

மீனவர்கள், சுற்றுலாப் பயணிகள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை குடித்த புயல், தனுஷ்கோடி நகரம் இருந்ததற்கான அடையாளமாக சில சுவடுகளை மட்டுமே விட்டுச் சென்றது. பரபரப்பாக இயங்கிய நகரை வாழத்தகுதியற்ற பகுதியாகவும் மாற்றியதுதான் வேதனையின் உச்சம்.

இடிந்த வீடுகள், வழிபாட்டுத் தளங்கள் என மிஞ்சியுள்ள தனுஷ் கோடியில் தற்போது சுற்றுலாத் தலமாகவும், மீனவர்கள் வலைகளை உலர்த்தும் இடமாக மட்டுமே உள்ளது.
பாக்ஜலசந்தியை வடக்கு எல்லையாகவும், மன்னார் வளைகுடாவை தெற்கு எல்லையாகவும் தனுஷ்கோடியின் நிலப்பரப்பு இருப்பதால், கரைப்பகுதி மெல்ல கரைந்து சிறிது சிறிதாக கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதைத் தடுத்து வரும் தலைமுறைக்கு தெரியும் வகையில் பாதுகாக்க நடுவண் மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆறாத வடுவை சுமக்கும் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

author avatar
Parthipan K