வட மாவட்டங்களை பதம் பார்க்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

0
112

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் ஏற்பட்டு வருகின்றன.

தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகின்ற சூழ்நிலையில், வங்காளவிரிகுடாவில் மையம் கொண்டிருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் பொதுமக்கள் மழையுடன் புயல் அபாயத்தில் சிக்கி தவிக்கிறார்கள்.

தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருக்கிறது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று நவம்பர் மாதம் 11ஆம் தேதி மாலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் 40 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வு வேகம் 27 கிலோ மீட்டரில் இருந்து 21 கிலோ மீட்டராக குறைந்திருக்கிறது. இதனால் புயல் கரையை கடக்கும் போது 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்பிருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.

நேற்று இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக, சென்னையில் மிகப்பெரிய அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அதோடு சென்னையில் இன்றும் மழை பெய்து வருகிறது. தற்சமயம் காற்றும் ஆங்காங்கே வீச ஆரம்பித்து இருக்கிறது இதன் காரணமாக, சென்னை வாசிகள் அச்சத்தில் இருக்கிறார்கள். சென்னை அருகே கரையைக் கடக்கும் இந்த புயல் காரணமாக, வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.