நோய் தொற்று அச்சுறுத்தல்! தேவையின்றி ஒன்றுகூடுபவர்களுக்கு ஆப்பு வைத்த சுகாதாரத்துறை!

0
76

தமிழகத்தின் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சென்ற சில நாட்களாக அதிகரித்து வரும் நோய் தொற்று பாதிப்பு மற்றும் புதிய வகை நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, துணை ஆணையர்கள் எஸ் மணி எம்எஸ் பிரஷாந்த் வட்டார துணை ஆணையர்கள் சிவகுரு, பிரபாகரன், சிம்ரன் ஜீத் சிங், திருவல்லிக்கேணி காவல்துறை துணை ஆணையர் பகலவன் மற்றும் மண்டல அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர் தெரிகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, சென்னை மாநகராட்சியில் நோய்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட ஆயிரம் பணியாளர்களை நியமனம் செய்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

வார்டுக்கு 5 பணியாளர்கள் வீதம் 200 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இவர்கள் வீடு வெளியில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களுக்கு தேவையான எல்லா விதமான அத்தியாவசிய பொருட்களையும், மருந்துகள் மற்றும் உணவுகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் நேரடியாக அவர்களின் வீட்டிற்கு சென்று வழங்கும் பணியை மேற்கொள்வார்கள். அதோடு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா? என்று தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை இவர்கள் செய்வார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

ஒவ்வொரு மண்டலங்களிலும் தொலைபேசி மூலமாக ஆலோசனை வழங்கும் விதத்தில் 15 மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நோய்தொற்று பாதுகாப்பு மையங்களில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது,

அதோடு 21 நோய் தொற்று பரிசோதனை மையங்கள் சென்ற வருடம் செயல்பட்ட இடங்களுக்கு அருகிலேயே ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும் நோய்தொற்று கண்காணிப்பு மையத்தை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மண்டல அமலாக்க குழு மூலமாக அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்படும், இதற்கென்று ஒரு மண்டலத்திற்கு இரண்டு குழுக்கள் வீதம் 15 மண்டலங்களுக்கு 30 குழுக்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒவ்வொரு மண்டலத்திற்கும் இரண்டு வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. நோய் பரவல் அதிகம் இருந்த பகுதிகளில் கூடுதலாக 20 கார் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்.