தமிழகத்தில் கஞ்சா போதைப்பொருட்கள் விற்பனையால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக சிவி சண்முகம் எம்பி குற்றச்சாட்டு 

0
146
CVe Shanmugam
#image_title

தமிழகத்தில் கஞ்சா போதைப்பொருட்கள் விற்பனையால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாக சிவி சண்முகம் எம்பி குற்றச்சாட்டு

விழுப்புரம் எம்.ஜி.சாலையில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட பல்பொருள் அங்காடி ஊழியர் இப்ராஹீமின் குடும்பத்திற்கு விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. நேரில் சென்று ஆறுதல் கூறி அ.தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண உதவியை வழங்கினார்.அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சீரழிந்த சட்டம்- ஒழுங்கு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்ற இந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்திருக்கிறது. போதைப்பொருட்கள் விற்பனை தங்கு தடையின்றி நடக்கிறது. காவல்துறை முற்றிலும் செயலிழந்து தி.மு.க.வின் ஒரு அங்கமாக மாறியிருக்கிறது.

குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க காவல்துறை தவறியிருக்கிறது என்று பலமுறை எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு கட்டங்களில் பொது இடங்களிலும், சட்டசபையிலும் இந்த குற்றச்சாட்டை எடுத்து வைத்திருக்கிறார். கவர்னரிடத்திலும் நாங்கள் இந்த குற்றச்சாட்டை பலமுறை சொல்லியிருக்கிறோம்.

இன்றைக்கு 24 மணி நேரமும் டாஸ்மாக் விற்பனை நடந்து வருகிறது. பள்ளி- கல்லூரிகளின் அருகில் சர்வசாதாரணமாக கஞ்சா விற்கப்படுகிறது. இந்தியாவிலேயே சிறந்த முதல்-அமைச்சர் என்று சொல்லிக்கொள்ளும் ஸ்டாலின் அரசின் மிகப்பெரிய சாதனை கஞ்சா சாக்லேட் விற்பனை. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடக்கிறது.

இது ஆளும்கட்சி மீது எதிர்க்கட்சி வைக்கின்ற குற்றச்சாட்டு இல்லை. இது அனைத்து மக்களுக்கும் தெரிந்த உண்மை. இந்த கஞ்சா விற்பனையால் அனைத்து மக்களும் மட்டுமின்றி ஆளும்கட்சியினரின் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளும் பாதிக்கப்படுகிறார்கள்.

குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு

விழுப்புரம் மாவட்டத்தின் பல இடங்களில் கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதை தடுக்க வேண்டிய காவல்துறை தூங்கி வழிந்து கொண்டிருக்கிறது. இதனால் பல குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. வளவனூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தலித் சமூகத்தை சேர்ந்த மூதாட்டியை அடித்து உதைத்து சொத்தை எழுதி தருமாறு கேட்டு மிரட்டியுள்ளார்.

விக்கிரவாண்டியில் இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. ராதாபுரத்தில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். கஞ்சா, போதைப்பொருள் விற்பனையால் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனால் மக்கள் அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வியாபாரிகள் நிம்மதியாக வியாபாரம் செய்ய முடியவில்லை. பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் நிம்மதியாக வீட்டுக்கு வர முடிவதில்லை. இளம்பெண்களின் உயிருக்கும், கற்புக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

நேற்று முன்தினம் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த இப்ராஹீம், ஒரு பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முயன்றபோது 2 பேரால் குத்திக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த குற்றவாளிகள் இருவரும் கஞ்சா போதையில் இருந்திருக்கின்றார்கள். முதல்-அமைச்சர், நடந்த சம்பவத்தை முழுமையாக சொல்லாமல் குடும்ப பிரச்சினையால் இந்த கொலை நடந்திருப்பதாக சொல்கிறார்.

குற்றவாளிகள் இருவரும் தி.மு.க.வின் தீவிர உறுப்பினர்கள். அவர்கள் அணிந்திருந்த பனியன்களில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் படத்தை போட்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மாலை 4 மணியில் இருந்து விழுப்புரம் நகரில் அட்டூழியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கடைகளை சூறையாடியிருக்கிறார்கள், மாணவர்களை தாக்கியிருக்கிறார்கள்.

இது காவல்துறைக்கு தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். ஏனெனில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது. நோன்பில் இருந்த இப்ராஹீமை கொலை செய்திருக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

பாரபட்சமின்றி நடவடிக்கை

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் விழுப்புரம் அமைதியாக இருந்தது. எந்தவொரு வியாபாரிகள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருந்ததா, மிரட்டப்பட்டார்களா? தாக்கப்பட்டார்களா? என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

2006-2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்த நில அபகரிப்பு, அடிதடி, கொலை போன்ற சம்பவங்கள் மீண்டும் தி.மு.க. ஆட்சியில் தற்போது அரங்கேற ஆரம்பித்திருக்கிறது. திறமையான காவல்துறை திறமையற்ற முதல்-அமைச்சரின் கீழ் செயல்படுவதால் திறமையிழந்திருக்கிறது. அவர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கிறது. முதல்-அமைச்சர் ஸ்டாலின் எப்படி ஒரு சோகேஷ் பொம்மையாக இருக்கிறாரோ அதுபோல் டி.ஜி.பி.யும் சோகேஷ் பொம்மையாக இருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையினரின் உதவியோடு நடைபெறும் கஞ்சா விற்பனை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். இதற்கு துணை போகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பாராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள் சுதந்திரமாக வியாபாரம் செய்வதற்கு இந்த அரசு வழிவகை செய்ய வேண்டும்.

உரிய இழப்பீடு

இந்த சம்பவத்தில் உயிரிழந்த இப்ராஹீமிற்கு எங்கள் கட்சியின் சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கியிருக்கிறோம். ஆனால் நேற்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது முதல்-அமைச்சர் அதைப்பற்றி வாயே திறக்கவில்லை.

தேர்தல் நேரத்தில் மட்டும் சிறுபான்மையினர், சிறுபான்மையினர் என்று வாய்கிழிய பேசும் முதல்-அமைச்சர், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த அதுவும் நோன்பு கஞ்சிக்கான அரிசி வாங்க வந்தவர் முதல்-அமைச்சரின் படத்தை அணிந்துகொண்டு வந்தவர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

அந்த கொலையை செய்தவர்களுக்கு முதல்-அமைச்சர் வக்காலத்து வாங்கிக்கொண்டு அந்த சிறுபான்மையினருக்கு இதுவரையிலும் எந்த நிவாரண நிதியும் அறிவிக்கவில்லை. எனவே தமிழக அரசு, அவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

author avatar
Savitha