அரசியலுக்காக கமல்ஹாசன் பேசிய சர்ச்சை கருத்துக்கு எதிராக எழும் கண்டனம்

0
71

அரசியலுக்காக கமல்ஹாசன் பேசிய சர்ச்சை கருத்துக்கு எதிராக எழும் கண்டனம்

தமிழக சட்ட பேரவைக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது முஸ்லிம்கள் வசிக்கும் பள்ளப்பட்டி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது இந்துக்கள் குறித்து கமல்ஹாசன் பேசிய சர்ச்சைகுரிய கருத்தானது இந்துக்கள் இடையே கடும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது இருக்கும் அரசியல் தலைவர்கள் போல அல்லாமல் நடிகர் கமலஹாசன் எதாவது மாற்றத்தை கொண்டு வருவார் என்று எதிர்பார்த்திருந்த பெரும்பாலான மக்களுக்கு இந்த சர்ச்சைக்குரிய பேச்சால் ஏமாற்றமே மிஞ்சியது.

பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தான் என்றும் அது கோட்ஸே என்றும் குறிப்பிட்டு பேசியிருந்தார்.இவரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து முஸ்லிம்கள் வாக்கை பெறுவதற்காக என்பதை அனைவரும் அறிவர்.மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து அரசியல் செய்ய கமலும் ஆரம்பித்து விட்டார். அதற்காகவே இது போன்ற சர்ச்சை கருத்தை பதிவு செய்திருக்கிறார் என்றும் மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.

நடிகர் கமலஹாசனின் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் பாஜக தலைவர் H ராஜா கூறியுள்ளதாவது தமிழகத்தில் ராமலிங்கம் படுகொலையை செய்த முஸ்லீம் தீவிரவாதிகளை கண்டிக்கவோ,அவர்களின் தவறை சுட்டிக்காட்டவோ கமலஹாசனுக்கு தைரியம் இருக்கிறதா என்றும் அவர் கேட்டுள்ளார்.மேலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜனும் இவரது கருத்துக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்தவரான விவேக் ஓபராய் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர் முஸ்லிம் மக்களை சந்தோசப்படுத்த பல வழிகள் உள்ளன. அவர்களை சந்தோஷப்படுத்த எங்கள் மதத்தை இழுக்காதீர்கள் என்றும், உங்களை சிறந்த நடிகராக மதிக்கிறேன் ஆனால் இப்படி ஒரு கேவலமான செயலில் மீண்டும் ஈடுபடாதீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கமல்ஹாசனின் இந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு, திராவிட கழக தலைவர் வீரமணி, காங்கிரஸ் தலைவர் K.S அழகிரி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏற்கனவே இருக்கும் அரசியல்வாதிகள் தான் சாதி,மதம் மற்றும் மொழி அடிப்படையில் பிரிவினைவாத அரசியல் செய்கிறார்கள் என்றால் மாற்றத்தை ஏற்படுத்த போகிறேன் என்று கட்சி ஆரம்பித்த கமலஹாசனும் அதையே செய்ய முயற்சிப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமலஹாசனின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சால் இடைத்தேர்தலுக்கான அவரது பிரச்சாரம் இன்று நிறுத்தப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K