தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்புத் தகவல்!

0
83

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தில் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என கூறினார். குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், மக்கள் நெரிசல் அதிகமாக உள்ள நகரங்களிலும் பாதிப்பு அதிகரிக்கும் என்றார்.

ஒமைக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருவதாக தெரிவித்த ராதாகிருஷ்ணன், இதனால், அதிக பாதிப்பு இல்லை என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார். எனினும் மக்கள் கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா தொற்றை எதிர்கொள்ள ஆக்சிஜன், மருந்துகள் உள்ளிட்டவை கையிருப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.

போதுமான மருத்துவக் கட்டமைப்புகளை ஏற்படுத்துமாறு முதலமைச்சர் ஆணையிட்டிருப்பதாகவும், தொற்று பாதிப்புக்கு ஏற்ப படுக்கைகள், நடுவங்கள் அதிகரித்து வருவதாவும் தெரிவித்தார். பேருந்துகளில் பயணம் செய்யும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பொதுமக்கள் இனியும் காலம் தாழ்த்தாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் என்றும், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.