லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை! சிக்கியது கணக்கில் காட்டப்படாத 10 லட்சம் ரொக்கம்!

0
95

தமிழ்நாட்டில் போக்குவரத்து துறைக்கு சொந்தமான 17 சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்றைய தினம் நடத்திய அதிரடி சோதனையில், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லைகளில் இருக்கின்ற போக்குவரத்து துறை சோதனை சாவடிகளில் முறைகேடு நடந்து கொண்டிருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் கண்காணிப்புத் துறை காவலர்கள் இன்று அதிகாலை முதலாகவே பல இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூரில் இருக்கின்ற கந்தேககவுண்டன் சாவடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர் கணேசன், ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அங்கு பணிபுரிந்த போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் சரோஜா, உதவியாளர் அருண்குமார் ஆகியோரிடம் விசாரணை செய்தார்கள்.

இதனை தொடர்ந்து, அலுவலகத்திலேயே கணக்கில் காட்டப்படாத பணம் ஏதேனும் வைக்கப்பட்டு இருக்கின்றதா என்று சோதனை செய்ததில், 87 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது. இங்கே நடைபெற்ற சோதனை காலை 10 மணிக்கு நிறைவு பெற்றது பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு அதிகாரிகள் கணக்கு காட்டவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல ஓசூர் சோதனை சாவடியில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 1.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட இருக்கின்றது.

தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை போக்குவரத்து சோதனைச் சாவடியில் நடந்த 4 மணி நேர அதிரடி சோதனையில், ரூபாய் 72 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது, இங்கே மாவட்ட உதவி கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் காலை 6 மணி முதல் சோதனைகளில் ஈடுபட்டு வந்தார்கள்.

நசரத்பேட்டை, திருத்தணி, தேனி, பொள்ளாச்சி, களியக்காவிளை போன்ற சோதனை சாவடிகளிலும் சோதனை நடைபெற்று இருக்கின்றது பணம் மட்டும் இல்லாது சரக்கு வாகனங்களில் ஏற்றி வரப்படும் உணவு பொருட்களையும் கட்டாயப்படுத்தி அதிகாரிகள் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.