சீன ஆய்வகத்தில் உருவான கொரோனா – ஆதாரங்கள் உள்ளதாகக் கூறும் அமெரிக்கா

0
58

சீன ஆய்வகத்தில் உருவான கொரோனா – ஆதாரங்கள் உள்ளதாகக் கூறும் அமெரிக்கா

கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலுள்ள, வுகானில் பரவ துவங்கிய கொரோனா உலகத்தையே உலுக்கி வருகிறது.

கடந்த மாதம் வரை பாதிப்பு பட்டியலில் முதலிடம் வகித்த ஸ்பெயினை கடந்த சில வாரங்களுக்கு முன் முந்தியது அமெரிக்கா. அமெரிக்காவில் இது வரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட, 68 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் சீனாவின் வுஹானில் உள்ள ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியது என்பதற்கு, ஏராளமான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரான மைக் பாம்பியோ கூறியுள்ளார். இந்த வைரஸ் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

இந்த வைரஸ் பரவலில் சீனாவின் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த வைரஸ் குறித்து முக்கிய தகவல்களை பெய்ஜிங் பொறுப்பற்ற முறையில் மறைப்பதாகவும், அதனால் பெய்ஜிங்கே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் எங்கு உருவானது என்பது குறித்த தகவல்களை அறிய அமெரிக்க உளவாளிகள் செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதலில் வுஹான் சந்தையில் விற்பனை செய்யப்படும் வௌவால் உள்ளிட்ட விலங்குகளால் இந்த வைரஸ் பரவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், தற்போது ஆராய்ச்சி மையத்திலிருந்து பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநரான பாம்பியோ செய்தியாளர்களிடம் பேசுகையில் “சீனாவின் வுகான் நகரில் இருக்கும் ஆய்வகங்களிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதற்கு ஏராளமான முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன. கொரோனா வைரஸ், மனிதர்களால் உருவாக்கப்படவில்லை என அமெரிக்க உளவுத்துறை கூறும் கருத்தில் நான் முரண்படவில்லை.

அதே சமயம், பல சிறந்த மருத்துவ ஆய்வாளர்கள் இந்த வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது எனத் தெரிவிப்பதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. வுகானில் இருக்கும் ஆய்வகங்கள் அனைத்தும் சர்வதேசத் தரத்துக்கு இணையாக இல்லாதவை, தரம் குறைந்தவை, போதுமான அளவு சுத்தம் இருக்காது. இந்தக் காரணங்களால் வைரஸ் அங்கிருந்து பரவியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறை கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “சீனா கொரோனா வைரசின் தன்மை தெரிந்து திட்டமிட்டே உலகிற்கு மறைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அதற்குரிய மருந்துகள், மருந்துப் பொருட்களை இருப்பு வைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் உலக சுகாதார அமைப்புக்கும் இதன் தாக்கம் குறித்த உண்மைத் தகவல்களைச் சீனா தெரிவிக்கவில்லை. ஜனவரி மாதம் தான் இந்தத் தகவலை சீனா வெளியுலகிற்குத் தெரிவித்தது. கொரோனா வைரஸ் ஆபத்து குறித்துப் பேசிய மருத்துவர்களைக் கட்டுப்படுத்திய சீனா, அதை உலகிற்குத் தெரிவிக்கத் தாமதப்படுத்தியது” என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த கருத்து உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K