பிரிட்டன் பிரதமரையும் விட்டு வைக்காத கொரோனா! ஆய்வில் பாதிப்பு உறுதி

0
63

பிரிட்டன் பிரதமரையும் விட்டு வைக்காத கொரோனா! ஆய்வில் பாதிப்பு உறுதி

உலகம் முழுவதும் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அந்தவகையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளும் இறப்புகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் பிரிட்டனில் மட்டும் இதுவரை 578 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 11,816 நபர்கள் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி, பிரிட்டன் சுகாதாரத்துறை துணை அமைச்சரும், கன்சர்வேடிவ் கட்சி எம்.பியுமான நடீன் டோரீஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இந்த தகவலை நடீன் டோரீஸே உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து பிரிட்டன் இளவரசர் சார்லஸ் அவர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்த இருவருமே பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரிட்டன் பிரதமருக்கு இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அலுவலரின் ஆலோசனைக்கு ஏற்ப கொரோனா பாதிப்பு உள்ளதா என கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டது என்று பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

இதனையடுத்து இன்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கடந்த 24 மணி நேரமாக கொரோனா தொடர்பான லேசான அறிகுறிகள் தென்பட்டன. இந்நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதனால் என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்வேன். நாம் இந்த வைரஸை எதிர்த்துப் போராட வேண்டும். மேலும் காணொளி காட்சி சந்திப்பின் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தலைமை ஏற்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் பல்வேறு நாடுகளில் வாழும் பெரும்பாலான பொது மக்கள் பாதிக்கபட்டு வரும் சூழ்நிலையில் தற்போது உலக நாடு ஒன்றின் பிரதமர் ஒருவரே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது பொது மக்களிடம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.