கொரோனா நிவாரண பொருட்களை நிபந்தனையுடன் வழங்க வேண்டும்! -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

0
75

கொரோனா நிவாரண பொருட்களை நிபந்தனையுடன் வழங்க வேண்டும்!
-சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கொரோனா நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்குவதில் நிபந்தனையுடன் செயல்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நோக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்தார். இதையடுத்து நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால் மக்களிடன் அடிப்படை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு பாதிப்பில் பலர் வெளியூரில் தவித்து வருகின்றனர். மேலும் சொந்த ஊரில் இருக்கும் மக்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுபோன்ற சிக்கலை தீர்க்கும் விதமாக அம்மா உணவகம், குறிப்பிட்ட நேரத்திற்கு காய்கறி மார்க்கெட் திறப்பு, கிராமங்களுங்கே சென்று காய்கறி விற்பனை மற்றும் ரேசன் கடை மூலம் இலவச கொரோனா நிவாரண பொருட்களும் வீட்டுக்கு சென்று கொடுக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உணவு தட்டுப்பாடு நிலவியதால் அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள மற்றும் சமூக பற்றாளர்கள் அரசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு அளித்து வந்தனர்.

இதனால் கொரோனா சமூக பரவலாக மாறக் கூடும் என்ற காரணத்தால் சென்னை மாநகராட்சி புதிய நிபந்தனை உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரவு பின்வருமாறு;

  • கொரோனா தொற்று நோய் உறுதியாகி சென்னை மாநகராட்சியால் தடைசெய்யப்பட்ட இடங்களில் யாரும் 2 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உணவு வழங்க கூடாது.
  • அரசு பொது மருத்துவமனைகள், மாநகராட்சி சுகாதார மையங்கள், கொரோனா தொற்று நோய் பரிசோதனை மையங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை பகுதிகளை சுற்றியும் 2 கி.மீ தொலைவுக்கு உணவுகளை வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உணவு வழங்க வேண்டுமெனில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு கிடங்குகளில் உணவை ஒப்படைக்கவும். பின்னர் உணவுப் பொருட்கள் முறையாக பரிசோதனை செய்யப்பட்டு வழங்கப்படும்.
  • உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்க 48 மணி நேரத்திற்கு முன்பே சென்னை மாநகராட்சி சம்பந்தபட்ட மண்டல அலுவலரிடம் தெரியப்படுத்த வேண்டும்.
  • உணவு வழங்கும் இடம் மற்றும் இதர தகவல்களை மண்டல அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
  • உணவுகளை எந்த மண்டலத்திற்கு வழங்க வேண்டுமோ அந்த மண்டலத்திலேயே உணவு தயாரிக்க வேண்டும்.
  • தயாரிக்கப்பட்ட உணவுகளை உரிய நேரத்தில் அமைப்பாளர்கள் வழங்கி முடிக்க வேண்டும்.
  • உணவு வழங்குமிடத்தில் ஓட்டுனருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரிதிநிதி, தன்னார்வல அமைப்பு, குழுவினர் உட்பட மூன்று நபர் மட்டுமே இருக்க வேண்டும்.
  • உணவு வழங்கும்போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். மூன்று பேர்களை தவிர வேறு யாரும் செல்லக்கூடாது.
  • கொரோனா நிவாரண பொருட்களை வழங்குவதில் 144 தடை மற்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்திய அனைத்தும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு சென்னை மாநகராட்சியின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

author avatar
Jayachandiran