சென்னை ஐஐடியில் மீண்டும் நுழைந்த நோய் தொற்று பாதிப்பு!

0
65

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் தாக்கம் பரவலாக இருந்து வருகின்றது. அதிலும் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், என்று கொத்துக்கொத்தாக நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

உதாரணமாக, அண்மையில் சென்னை குரோம்பேட்டையில் இருக்கின்ற சென்னை தொழில்நுட்ப கல்லூரியில் ஏராளமான மாணவர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு அங்கே இருக்கக்கூடிய விடுதி மாணவர்கள் எல்லோருக்கும், நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடுத்த கட்டமாக தற்சமயம் சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நோய்தொற்று பரிசோதனை செய்யப்பட்டு அதில் பலருக்கு நோய்த் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நோய்த்தொற்றின் காரணமாக, இணையதளம் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டாலும் ஆராய்ச்சி படிப்பு உட்பட சில மாணவர்கள் வளாகத்தில் தங்கி படித்து வருகிறார்கள்.

அந்த விதத்தில் 17 மாணவர்களும், 41 ஊழியர்களும், என்று ஒட்டுமொத்தமாக 58 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் எல்லோரும் கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதைத்தவிர ஐஐடி வளாகத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்காணித்து அவர்களுக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கு நடுவில் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு அனுப்பி இருக்கின்ற கடிதத்தில் விடுமுறை முடிந்து கல்வி நிறுவனத்தின் வளாகத்திற்கு திரும்பும் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் தலைமை மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் எனவும், அவர் வழங்கும் பரிந்துரையின் அடிப்படையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு வகுப்பறைகள், ஆய்வகங்கள், உள்ளிட்டவற்றை அணுகுவதற்கு நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் சான்றிதழ் அவசியம் தேவை என தெரிவித்திருப்பதாக கூறுகிறார்கள் மாணவர்கள்.

நோய் தொடரின் முந்தைய பாதிப்பின் போது இதேபோல சென்னை ஐஐடியில் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் கொத்துக்கொத்தாக பாதிக்கப்பட்டார்கள் தற்போது சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை அடுத்து தற்சமயம் மீண்டும் அதே போல நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது, அதில் மேலும் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மற்றும் ஐஐடி நிர்வாகம் உள்ளிட்டவை தீவிரப்படுத்தி இருக்கிறது.