கொரோனா பாதிப்பு ஆண்களுக்கு மலட்டுதன்மையை ஏற்படுத்துமா? அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி முடிவு

0
99
Corona Vaccine in 2 Rupees-News4 Tamil Online Tamil News
Corona Vaccine in 2 Rupees-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பு ஆண்களுக்கு மலட்டுதன்மையை ஏற்படுத்துமா? அதிர்ச்சியளிக்கும் ஆராய்ச்சி முடிவு

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை பல்வேறு வகையில் பாதித்துள்ளது.இதற்காக உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன.அதே நேரத்தில் ஆராய்ச்சியாளர்களும் இதற்க்கான தடுப்பூசி மற்றும் நோயினால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

அந்த வகையில் மும்பை ஐ.ஐ.டி., மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையும் இணைந்து ஒரு ஆராய்ச்சியை நடத்தின.கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஈடுபட்ட இந்த ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சியளிக்கும் முடிவுகள் வெளியானது. அதாவது கொரோனா வைரஸ், ஆண்களின் குழந்தை பேறு திறனில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை அறியவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த ஆய்வுக்காக குழந்தை பேறு பிரச்சனை எதுவும் இல்லாத நல்ல உடல்நலத்துடன் உள்ள 20 முதல் 45 வயது வரையிலான 27 ஆண்களை ஆய்வுக்கு பயன்படுத்தியுள்ளனர். இவர்களில் 10 பேர் நன்கு ஆரோக்கியமானவர்கள், மீதி 17 பேர், லேசான, மிதமான கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் குணமடைந்தவர்கள்.

 

இந்த ஆய்வில் அந்த 27 ஆண்களின் விந்தணுவில், இனப்பெருக்க நிகழ்வுடன் தொடர்புடைய புரோட்டீன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது, கொரோனா தாக்காத ஆண்களின் புரோட்டீன்களை விட கொரோனா தாக்கி குணமடைந்த ஆண்களின் புரோட்டீன்கள் எண்ணிக்கையானது பாதிக்கும் குறைவாக இருந்தன.

 

மேலும், கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையும் கணிசமாக குறைந்திருந்தது.மேலும் அதன் நகரும் தன்மை, சரியான வடிவிலான விந்தணு எண்ணிக்கையும் குறைவாக காணப்பட்டன.

 

எனவே,இந்த ஆய்வின் முடிவில் லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பு கூட ஆண்களின் குழந்தை பேறு திறன் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும்,அது மலட்டுத்தன்மைக்கு காரணமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகும் அந்த பாதிப்பானது நீடிப்பது தெரிய வந்தது.

 

கொரோனாவை உண்டாக்கும் சார்ஸ் வைரஸ், பொதுவாக சுவாச உறுப்புகளைத்தான் தாக்கும். ஆனால் அந்த வைரசும், அதற்கு உடல் காட்டும் எதிர்வினையும் இதர திசுக்களையும் சேதப்படுத்துவது இந்த ஆய்வின் வழியாக கண்டறியப்பட்டது.

 

இந்த ஆய்வு முடிவுகள், ஒரு விஞ்ஞான பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.இதை உறுதிப்படுத்த மேலும் பெரிய அளவிலான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், இதர காய்ச்சலில் இருந்து குணமடைந்த ஆண்களையும் இது போன்ற ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.