இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொடர் கோடைமழை! விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி!  

0
175
#image_title

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் தொடர் கோடைமழை! விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி!  

சுட்டெரிக்கும் கோடை வெயிலில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  தொடர் மழை பெய்து  வருவதால் அங்கு அணைப்பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதுவும் பலத்த மழையாக பெய்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கும் முன்னரே தற்போது கடும் வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலை சமாளிக்கும் பொருட்டு தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில்  மண்டல வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,  தற்போது தென் தமிழகம் முதல் மத்திய பிரதேசம் வரை வடக்கு, தெற்காக கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி வளிமண்டலத்தில் நிலவுகிறது. இதன் காரணமாக  தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான கோடை மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகலில் அந்த மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும் திருநந்திக்கரை, குலசேகரம், திற்பரப்பு, களியல், பொன்மனை, சுருளகோடு, பூதப்பாண்டி, கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் கணிசமான அளவு மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது.  அங்குள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை பெய்து அணையில் நீர்வரத்து காரணமாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.